தலையங்கம்

கற்பதில் கவுரவம் கூடாது

செய்திப்பிரிவு

அன்பு மாணவர்களே,

முப்பொழுதும் புத்தகமும் கையுமாக படித்துக் கொண்டிருப்பீர்கள். பள்ளி, வீடு, டியூஷன் மையங்கள் என நான்கு திசைகளிலும் பாடங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். இதில் பெரும்பாலும் நண்பர்களுடன் இணைந்து படிக்க நேரிடும். பள்ளியில் அல்லது வேறு தருணங்களில் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து படிக்கும் வழக்கம் நம்மிடையே உண்டு. அப்போது சந்தேகம் இருக்கும் பாடங்களை நண்பர்களிடம் கேளுங்கள். அவர் வகுப்பில் முதல் மாணவராகவோ குறிப்பிட்ட பாடத்தில் நன்கு தேர்ந்தவராகவோ இருக்கலாம். இதில் எப்படி இருந்தாலும் இருவருக்குமே சர்வ நிச்சயமாக பெரும் பலன் உண்டு.

உண்மையில், நம்மிடம் உள்ள பெரிய கோளாறு என்னவென்றால், சம வயதுடைய மாணவனுக்கு என்ன தெரியும் என்று நினைப்போம். அவனிடம் போய் கேட்க வேண்டுமா என்ற எண்ணம் வரும். ஆசிரியரிடம் கேட்பது தயக்கம் என்றால், சம வயதுடைய நபரிடம் கேட்பது கவுரவ குறைச்சல் என்று நினைக்கிறோம். அதிகபட்சமாக ‘சிலபஸ்’, ‘நோட்ஸ்’ போன்ற விஷயங்களை கேட்போமே தவிர, பாடத்தில் இருக்கும் சந்தேகம் தொடர்பாக விவாதிக்க மாட்டோம். இது ஒரு உளவியல் சிக்கல்தான்.

நம் சமூகத்தில் இருக்கும் ‘நீ பெரியவனா? நான் பெரியவனா?’ போன்ற வெற்றுக் கூச்சலிடும் சிந்தனையின் நகல்தான், இதுபோன்று ஆக்கப்பூர்வமாக விவாதிக்கும் பண்பாடு உருவாகாமல் இருப்பதற்கு காரணம்.

இதன்மூலம் கேள்விகள், சந்தேகங்கள் கேட்பவருக்கும் அதை விளக்கும் நபருக்கும் பெரிய அனுபவம் கிடைக்கும். அதாவது, மீண்டும் சொல்லிக் கொடுக்கும் போது அந்த பாடம் நன்கு பதியும். அதை கேட்கும் மாணவருக்கு நன்றாவே புலப்படும். அதிலும் சம வயதுடையர்களின் மொழியில் பாடங்களை பகிர்ந்து கொள்ளும்போது எளிமையாகவும் புரியும். உங்கள் ஆசிரியர்களும் கற்றுக் கொண்டுதான் உங்களுக்கு பாடம் நடத்துகின்றனர். இதனால் கற்றலும் கற்பித்தலும் ஒன்றே. கற்றுக்கொள்வதில் கவுரவம் பார்க்காதீர்கள்.

SCROLL FOR NEXT