தலையங்கம்

ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும்

செய்திப்பிரிவு

அன்பு மாணவர்களே,

ஒரு நாளைக்கு நாம் கண் விழிப்பது முதல் கண் அயறும் வரைபெரும் சாகசப் பயணத்தை மேற்கொள்கிறோம். ஆம்... இந்தியாவைப் பொறுத்தவரை மிகப்பெரிய இணைப்பாக இருப்பதுசாலைப் போக்குவரத்து. உலகின் இரண்டாவது பெரிய சாலைகட்டமைப்பைக் கொண்டுள்ளது. சுமார் 59 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படியாக உலகில் 2-வதாக அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் போக்குவரத்து பயன்பாட்டில் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டுமல்லவா? பெரும்பாலும் பள்ளி, கல்லூரி அலுவலகம் அனைத்துக்கும் நேரம் ஒரே மாதிரி உள்ளது.

இதற்கு விரைவாக செல்ல வேண்டுமென நீங்கள் பயன்படுத்தும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா? பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்கள்தொகை அதிகரிக்கும் போது அந்த பகுதி விரிவடையும். அதேநேரத்தில் போக்குவரத்து சுருங்கும். ஏனென்றால் அந்த குறிப்பிட்ட இடத்தில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது சாலையில் நெரிசல் அதிகரிக்கக் கூடும்.

அதுவும் காலை நேரத்தில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புகை கிளம்ப முண்டியடித்தபடி செல்லும்போது எளிதாக விபத்துகள் நிகழும். அப்படிதானே?

பெருநகரங்கள் அதிகரித்து வரும் கால கட்டத்தில், சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்ட வேளையில் எவ்வித கவலையுமின்றி சென்று கொண்டிருக்கிறோம். தற்போதுள்ள சூழலியல் நிலையை குறைந்தபட்சமாவது மாற்றவேண்டும் என்ற உணர்வு இருந்தால் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இதை உங்கள் சுற்றியுள்ள அனைவரிடமும் தீர்க்கமாகச் சொல்லுங்கள். உங்கள் வீட்டில் சைக்கிள் கூட இல்லாமல் இருக்கலாம் அல்லது இரண்டு இரு சக்கர வாகனம் வைத்திருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் மாசுபாடுகள் குறைய பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது நமது தலையாயக் கடமையாகும். இதை தனி நபரால் செய்ய இயலாது. ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்!

SCROLL FOR NEXT