அன்பு மாணவர்களே,
பள்ளிக்கூடத்தில் செங்கற்களால் செதுக்கிக் வடிவமைத்திருக்கும் நான்கு சுவர்கள்தாம் நமது வாழ்வின் ஒட்டமொத்த சிந்தனைகளை செதுக்குவதற்கான இடம். ஆம், அந்த இடத்தில் மாணவர்களாகிய நீங்கள் தான் மன்னர்கள். சதுரங்க விளையாட்டில் உள்ளது போல் ராஜா, ராணி, சிப்பாய்கள் யாவுமே வகுப்பறை சதுக்கத்துள் நீங்கள் மட்டும் தான்!
பொதுவாக வகுப்பறையில் மாணவர்களிடம் பல சிக்கல் உண்டு. அதில் முக்கியமானது தயக்கம். வகுப்பில் பாடம் நடத்தும்போதோ அதற்கு பின்னரோ தனக்கு ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகளை கேட்பதற்கு மிகுந்த தயக்கம் கொள்வார்கள்.
அது அறிவுசார் சூழலில் இயங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அறவே கூடாது. நாம் கேள்வி கேட்பதால் மாணவர்கள் சிரிப்பார்கள், நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று நினைப்பது தேவையற்றது. இதனால் நமக்கு தான் நஷ்டம்.
இனி தேர்வுக்கு நீண்ட நாட்கள் இல்லை. நாம் படிக்க படிக்க இயல்பாகவே சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்து கொண்டிருக்கும். குறிப்பாக கணிதம், இயற்பியல், வணிக கணிதம் போன்ற சூத்திரங்கள் அதிகம் இருக்கும் பாடங்களில் கேள்விகள் ஏற்படும். அதேபோல் மொழிப்பாடங்களில் இலக்கணத்திலும் ஏற்படும். இதை உடனுக்கு உடன் தீர்த்துக் கொள்வதே நன்று.
உங்களுக்கு தெளிவாகும் வரையில் கேளுங்கள். சிறிது நேரமாவது பாடம் குறித்து நண்பர்களுடன் அல்லது ஆசிரியருடன் உரையாடுங்கள். நம்முடைய கேள்விகளே பகுத்தறிவுக்கு அடித்தளம். அதனால் தேவையில்லாத தயக்கத்தை விட்டுவிட்டு உற்சாகமான சூழலை ஏற்படுத்துங்கள். இதுவே கவலையில்லாமல் கல்வி பயில்வதற்கு சிறந்த வழியாக இருக்கும்.