தலையங்கம்

மனவலிமை தரும் ஒற்றுமை

செய்திப்பிரிவு

அன்பு மாணவர்களே,

ஆளில்லாத காட்டுக்குள் நாம் இருந்தால் எப்படி இருக்கும். பேச்சு துணை இருக்காது. நேரம் செல்ல செல்ல, பைத்தியம் பிடித்துவிடும். தனிமை அந்த அளவுக்கு கொடுமையானது. அந்தச் சூழ்நிலையை கையாள்வதில்தான் நமது மனவலிமை தெரியும். ‘கேஸ்ட் அவே’ (CAST AWAY) என்ற ஹாலிவுட் படம் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியானது. விமான விபத்தில் தப்பிக்கும் கதாநாயகன்.

ஆளில்லாத தீவில் கரை ஒதுங்குகிறான். அங்கு யாரும் இல்லாமல், உணவு கிடைக்காமல் அவன் சந்திக்கும் துயரங்கள்தான் படத்தின் கதை. தீவில் தனிமையில் இருந்தால், அந்தச் சூழ்நிலையை அவன் கையாளும் விதம் மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைதான் சீனாவின் வூஹான் நகரம் இருக்கிறது. கரோனா வைரஸ் இந்த நகரத்தில் இருந்துதான் பரவத் தொடங்கியது. வைரஸ் பரவுவதைத் தடுக்க வூஹானில் இருந்து யாரும் வெளியேற கூடாது.

யாரும் உள்ளே செல்ல கூடாது என்று தடை உத்தரவு போடப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். நகரமே மயான அமைதியில் இருக்கிறது. எப்படி இருக்கும் வாழ்க்கை.

ஆனால் வூஹான் மக்கள் தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்து கொண்டே தேச பக்தி பாடல்கள் பாடுகின்றனர். இரவில் வீட்டில் மின்விளக்குகள் மூலம் சிக்னல் கொடுத்து வணக்கம் சொல்லிக் கொள்கின்றனர்.

ஒவ்வொருவரும் வீடுகளில் தனிமையில் இருந்தாலும், மக்களுடன் மக்களாக இருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்த மனவலிமையைத் தருவது ஒற்றுமை மட்டுமே. வெறும் சத்தம் தரும் ஆறுதலுக்கு நிகர் ஏதுமில்லை. ஒற்றுமையாக இருங்கள். சாதித்துக் காட்டுங்கள்.

SCROLL FOR NEXT