வாழ்த்துகள் ரூ.1 கோடி வென்றுவிட்டீர்கள். பரிசு தொகையை பெற்றுக் கொள்ள கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள்! - இது போன்ற குறுஞ்செய்திகள் நம்முடைய கைப்பேசியில் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன.
ஒரு காலத்தில் குதிரை பந்தயம், லாட்டரி சீட்டு போன்றவை மக்களை சூதாட்ட மனவோட்டத்துக்குள்ளே இழுத்தன. இன்றோ தொழில்நுட்பம் வழியாக மக்களுக்குக் கண்கட்டு வித்தை காட்டப்படுகிறது. அதிலும் சமூக ஊடகங்களில் நம்முடைய அந்தரங்க தகவல்களைப் பகிரங்கமாக பகிர்ந்துகொள்ளும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இதனால் சைபர் குற்றங்கள் இணையம் வழியாக பெருகிக் கொண்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவர் பதிவிட்ட புகைப்படத்தை எடுத்து அதை ஆபாசமாக மாற்றி அந்த படத்தைக் கொண்டே அவரை பின்தொடர்ந்து கேலி செய்து அவமானப்படுத்துவது, அச்சுறுத்துவது போன்ற சம்பவங்கள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். இன்னும் சில செயலிகள் வந்துவிட்டன. அவற்றை நம்முடைய அலைபேசியில் பதிவிறக்கம் செய்தால் வேறொருவர் நம்முடைய அலைபேசிக்குள் ஊடுருவ முடியும். அதன் வழியாக அலைபேசியில் பதிந்திருக்கும் வெவ்வேறு கடவுச்சொற்கள் (password) உள்ளிட்ட முக்கியத் தகவல்கள், புகைப்படங்கள், காணொலிகளை திருட முடியும். யோசித்து பார்த்தாலே பயமாக இருக்கிறதல்லவா!
இது போன்று பலவிதமான சைபர் குற்றங்கள் நம்மை சுற்றி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றைத் தடுக்க சைபர் பாதுகாப்பு துறை நிறுவப்பட்டிருக்கிறது. மேலும் இன்றைய மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்த கல்வியை பயிற்றுவிக்கவும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் நிபுணர்களை உருவாக்கவும் பல முயற்சிகள் ஆங்காங்கே எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் முறைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தேசிய சைபர் தடயவியல் பல்கலைக்கழகம் திறக்கப்பட இருப்பதாகக் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குவான்ட்டம் கம்யூட்டிங் மற்றும் தொழில்நுட்ப தேசிய திட்டத்துக்கு ரூ.8000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் தகவல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்களைத் தடுக்க சைபர் வீரர்களாக நீங்கள் உருவெடுக்கலாம் மாணவர்களே!