அன்பு மாணவர்களே...
சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு சில நாட்களிலேயே வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கி விட்டது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடாக சீனா இருப்பதால் கரோனா வைரஸ் இங்கு பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, கரோனா மட்டுமல்ல எந்த வைரஸாக இருந்தாலும் அதன் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். அதற்கு சுகாதாரமாக இருப்பது ஒன்றுதான் வழி.
இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸின் பாதிப்பு இல்லை. எனினும், உலக மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், கைகளை சுத்தமான நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். இருமல் அல்லது சளி இருந்தால், மூக்கு, வாய் ஆகியவற்றை மறைக்கும் முகமூடி அணியுங்கள். காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருக்காதீர்கள்.
காய்ச்சல், இருமல், ஜலதோஷம் இருந்து மூச்சுவிட சிரமமாக இருந்தால் உடனடியாக மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். அத்துடன், எங்கெங்கு சென்று வந்தீர்கள் என்ற உங்கள் பயண விவரங்களை மருத்துவரிடம் மறக்காமல் கூறுங்கள். விலங்குகள், செல்லப் பிராணிகளுடன் இருப்பதை தவிர்த்து விடுங்கள். கைகளை கழுவாமல் கண், மூக்கு, வாய் போன்ற இடங்களைத் தொடாதீர்கள்.
பச்சை மாமிசம் அல்லது சரியாக சமைக்காத, வேகாத இறைச்சிகளை உண்ண வேண்டாம். இறைச்சி, பால் சமைக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். அதில் ஏதாவது கிருமி இருந்தால், அது அருகில் இருக்கும் சமைக்காத உணவில் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
மாணவர்களே... கரோனா என்பது ஒரு கிருமிதான். இதுபோல் சுகாதாரவிஷயங்களில் கவனம் செலுத்தினால் கரோனா மட்டுமல்ல எந்த வைரஸ் கிருமியும் நம்மை பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.