தூங்கி விழித்தால், காபி குடித்தால், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டால், இரங்கல் கூட்டத்தில் சடலத்துக்கு முன்பாக நின்றுகூட செல்ஃபி எடுத்துக்கொள்ளும் அளவுக்கு செல்ஃபி மோகம் இன்று எல்லோரையும் பிடித்தாட்டுகிறது.
நம் மனத்துக்கு நெருக்கமான நண்பர்கள், உற்றார் உறவினர்கள் அருகில் இருக்கும்போதுகூட தன்னந்தனியாக நின்றபடி செல்ஃபி எடுத்துக்கொள்ளும் இளையோர் பலரை பார்க்க முடிகிறது. இதன் உச்சக்கட்டமாக அபாயகரமான சாகசங்களைச் செய்தபடி தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போக்கு வேறு அதிகரித்துவருகிறது. நேற்று இப்படியான துயரகரமான சம்பவம் நிகழ்ந்து அதனால் மாணவி ஒருவர் பலியாகிவிட்டார்.
மேற்கு வங்கம் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் இவர். தோழிகளுடன் ஊர்சுற்றிப்பார்க்க கிஸ் நதிக்கரைக்குச் சென்றிருக்கிறார். அருகில் இருந்த ரயில் பாலத்தின் கம்பியைப்பிடித்து ஏறி அதன் உச்சியில் நின்று செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். அந்நேரம் வேகமாக வந்த ரயில் வண்டி அவர் மீது மோத,ரயில் பாலத்தில் இருந்து தவறி நதியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது போன்ற செல்ஃபி மரணங்கள் குறித்து சமீப காலமாக அடிக்கடி கேள்விப்படுகிறோம். எல்லோருமா இப்படி பித்துப்பிடித்து நடந்துகொள்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம்? இல்லைதான். ஆனாலும், ‘செல்ஃபி கலாச்சாரம்’ என்று பெயரிடும் அளவுக்கு இந்த போக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை மளமளவெனப் பரவி வருகிறது. எதற்காக செல்ஃபி எடுத்துக்கொள்கிறோம் என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டு பார்ப்போம்? நம்முடைய அழகை நாமே அடிக்கடி ரசித்துப் பார்க்கவா அல்லது மற்றவர்களுக்குக் காட்டி மகிழவா அல்லது இரண்டுமா? எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் சிக்கல்தான்.
கிரேக்கப் புராண கதையான நாசீசஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தண்ணீரில் பிரதிபலித்த தன் உருவத்தைக் கண்டு தன்னுடைய அழகில் மயங்கி அப்படியே உறைந்துபோனவன் நாசீசஸ். தன்னைத் தவிர வேறெதையும் பற்றி யோசிக்காத சுயநலவாதிகளை இதனால்தான் ஆங்கிலத்தில் நாசீஸ்ட் என்பார்கள். செல்ஃபி மோகம் பிடித்தவர்களை உளவியலாளர்கள் நாசீஸ்ட் என்றுதான் அழைக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் இனியும் இந்த செல்ஃபி மோகம் தேவையா?