தலையங்கம்

நாட்டின் நாளைய மன்னர்களே!

செய்திப்பிரிவு

குடியரசு தினத்துக்கு இன்னும் இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன. பள்ளி நடைபெறும் நாளில் வந்தாலாவது விடுமுறை கிடைக்கும். இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமையில் குடியரசு தினம் வருகிறது. இதில் என்ன உற்சாகம் இருக்கப்போகிறது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா மாணவர்களே!

‘எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே!’ என்று சொல்ல கேட்டிருப்பீர்கள். அதற்கான உண்மையான பொருளைத் தாங்கி நிற்கும் நாள் இதுவே. 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்தது உங்களுக்குத் தெரியும். ஆனால், மக்களுடைய, மக்களால், மக்களுக்கான அரசாங்கம் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா? அது 1950 ஜனவரி 26 அன்றுதான்.

ஆம் அன்றுதான் இந்தியா ஜனநாயக நாடு என்ற அந்தஸ்தை அடைந்தது. சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது இந்நாளில்தான். இதனால் எனக்கு என்ன பயன் என்கிறீர்களா?

நீங்களும் உங்கள் வகுப்பில் உள்ள பல மாணவர்களும் இன்று சரிசமமாக வகுப்பில் உட்கார்ந்து படிக்கக் காரணமே அரசியலமைப்புச் சட்டம்தான். அதற்கு தொடக்கப்புள்ளி குடியரசு தினம்தான் மாணவர்களே!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆறு அடிப்படை உரிமைகள் அனைத்து இந்திய மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. சாதி, மதம், மொழி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் யாரும் உங்களைவிட உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை என்பதே சம உரிமை எனப்படும் முதல் அடிப்படை உரிமையாகும். அடுத்து, ஒவ்வொருவரும் தாங்கள் நினைப்பதைத் தைரியமாக சொல்லும் கருத்துச் சுதந்திரம் உள்ளது என்கிறது சுதந்திர உரிமை.

இதில் ஒரு பிரிவாகத்தான் அனைத்து குழந்தைகளும் கல்வி பெறும் உரிமை உள்ளதாக 2002-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இப்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புகொண்ட நாள் குடியரசு தினம். இதை புரிந்துகொண்டால் இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் வளர்ந்து ’ஒரு விரல் புரட்சி’ (ஓட்டுப்போட்டு) செய்து நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கலாம் நாட்டின் நாளைய மன்னர்களே!

SCROLL FOR NEXT