அன்பான மாணவர்களே...
இமாச்சல் மாநிலம், மராண்டா என்ற இடத்தில் அனுராதா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த மாணவி அலைக்கா சர்மா. குடும்பத்துடன் 2018 செப்டம்பரில் ஒருநாள் காரில் செல்கிறார். கார் கட்டுப்பாட்டை இழந்து மலைச்சரிவில் உருள்கிறது. அதில் இருந்த அலைக்கா, அவரது தாய், தாத்தா, டிரைவர் என 4 பேரும் படுகாயம் அடைகின்றனர். மலைச்சரிவில் இருந்த ஒரு மரத்தில் கார் சிக்கிக் கொள்கிறது. மற்றவர்கள் சுயநினைவு இழக்க, அலைக்கா ரத்தக் காயங்களுடன் அதிர்ச்சியில் உறைகிறார்.
ஆனால், துணிச்சலை வரவழைத்துக் கொண்டு காரில் இருந்து எப்படியோ வெளியில் வருகிறார். காயங்களுடன் கடினப்பட்டு மலையில் ஏறி சாலைக்கு வருகிறார். அந்த வழியாக வந்தவர்களிடம் நடந்த விவரங்களை தெரிவிக்கிறார். அதற்குப் பிறகு நடந்தது சுபம். தன்னுடன் சேர்த்து 4 உயிர்களையும் காப்பாற்றி விட்டார் அலைக்கா. இதை அவரது ஆசிரியர் ரேணு கடோச் அறிந்து வெளியுலகுக்கு தெரிவிக்கிறார்.
இப்போது அவரது வீரச் செயலுக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவிக்க உள்ளது. 2019-ம் ஆண்டுக்கான தேசிய வீரதீர விருதுகளுக்கு 10 சிறுமிகள், 12 சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அலைக்காவும் ஒருவர். குழந்தைகளின் அளப்பரிய வீரத்தை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 1957-ம் ஆண்டு, தேசிய வீரதீர விருதை இந்திய குழந்தைகள் நலக் கவுன்சில் உருவாக்கியது. அதன்பின், ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.
மாணவர்களே... சரியான நேரத்தில் உயிரைக் காப்பாற்ற எடுக்கும் துணிச்சல் மிக்க செயலுக்கு விருது கிடைக்கும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். ஆனால், ஆபத்தான நேரத்தில் உடனடியாக முடிவெடுக்கும் திறமை, விரைந்து செயலாற்றும் திறமை ஆகியவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். அது பல நேரங்களில் உங்களுக்குக் கை கொடுக்கும்.