தலையங்கம்

வாருங்கள் வாசிப்போம்...

செய்திப்பிரிவு

பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தாண்டி, முன்பெல்லாம் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் மேலோங்கி இருந்தது. கடிதங்கள் மட்டுமே தகவல் தொடர்புக்கு இருந்த கால கட்டத்தின் அருமை இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை. உறவுகளிடம் இருந்து கடிதம் வந்துள்ளதா என்று தபால்காரரை தினமும் கேட்பார்கள். கடிதம் வந்தால் மகிழ்ச்சி, வந்த கடிதத்தைப் படித்துக் காட்டு என்று தாத்தா, பாட்டி, பெற்றோர் கேட்கும் போது ஒரு மகிழ்ச்சி. இப்படி கடிதங்களைப் படித்த காலம் உண்டு.

தவிர அம்புலிமாமா போன்ற சிறுவர்களுக்கான புத்தகங்களை வீடுகளில் வாங்குவார்கள். அதை பெரியவர்களும் படிப்பார்கள். புராண புத்தகங்களைப் பல வீடுகளில் உள்ள பெரியவர்கள் படிக்க சொல்லி கேட்பார்கள். இப்படி படிப்பது, வாசிப்பது என்று சென்ற தலைமுறையினர் கற்றுக்கொண்டவை ஏராளம். இன்று பாடப் புத்தகங்களுடன், ஸ்மார்ட்போன்களுடன் உலகம் சுருங்கி விட்டது.

உறவுகளை இணைத்தது வாசிப்பு. உலகை புரிய வைத்தது வாசிப்பு. இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அந்தப் பழக்கத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். அதற்காக பல முயற்சிகள் பலதரப்பில் எடுக்கப்படுகின்றன. இப்போது, சென்னையில் 43-வது புத்தக கண்காட்சி நேற்று தொடங்கி உள்ளது தெரியுமா? வரும் 21-ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கண்காட்சி நடக்கிறது. இங்கு ஏராளமான அரங்கங்களில் அறிவுக்கும் பொழுதுபோக்குக்கும் லட்சக்கணக்கான நூல்கள் உள்ளன.

வாழ்க்கையில் சாதித்த பலரும் நிறைய புத்தகங்களைப் படித்தவர்கள்தான். எனக்கு சிறந்த நண்பன் என்றால் புத்தகங்கள் தான் என்று சாதனையாளர்கள் பலர் கூறியுள்ளனர். ஒரு சிறந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, தெளிவுக்கு வேறு எதுவும் ஈடாகாது.

அதை அனுபவித்துப் பாருங்கள் மாணவர்களே... உங்கள் பெற்றோரை கட்டாயம் அழைத்துக் கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு செல்லுங்கள். குறைந்தபட்சம் ஒரு புத்தகத்தையாவது வாங்கி வந்து முழுவதுமாகப் படித்துப் பாருங்கள். அதன் பலன் உங்களுக்குப் போக போக தெரியும்.

வாழ்த்துகள்.

SCROLL FOR NEXT