அன்பான மாணவர்களே...
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. வள்ளுவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லி சென்ற அருமையான திருக்குறள். ‘யார் எது சொன்னாலும், உடனடியாக நம்பி விடாதீர்கள். அது உண்மையா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்’ என்பதுதான் இந்தக் குறளின் பொருள். இதன்மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் ‘புறம்’ (கிசுகிசு) பேசுகிறாரா இல்லையா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
ஒருவரைப் பற்றி யாரோ ஒருவர் சொல்வதை நம்பினால், நட்பு முறிந்து விடும். இதை பள்ளிகளில் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருப்பீர்கள். ஆதாரம் இல்லாமல் சொல்லப்படும் கருத்துகளும், பரப்பப்படும் செய்திகளும் சமுதாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். தவிர நவீன தொழில்நுட்ப உலகில் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் என பல தளங்களில் தினமும் ஏராளமான தகவல்கள் வெளிவருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை கூட இன்று நடந்தது போல் மீண்டும் பதிவு செய்து சிலர் குழப்பத்தை விளைவிக்கின்றனர். எது உண்மை செய்தி, எது பொய் செய்தி என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சமூக வலைதளங்களில் செய்திகள், வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. மாணவர்களே அவர்களைப் போல நீங்களும் எதையும் ஆராயாமல், ஆர்வத்தின் காரணமாக எந்தச் செய்தியையும் வீடியோவையும் வேறு யாருக்கும் அனுப்ப வேண்டாம். அப்படி செய்தாலே பிரச்சினைகள் தவிர்க்கப்படும். சமுதாயத்தில் வீண் வதந்திகள் பரவாது. வதந்திகள் பரவாமல் தடுப்பதும் கூட நமது கடமைதான்.
ஒரு காலத்தில் அவசர தேவைக்காக பயன்பட்ட தொலைபேசி, இன்று பல பரிமாணங்களுடன் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை தவறாக பயன்படுத்தி வாழ்க்கையைத் தொலைக்கவும் முடியும். சரியாகப் பயன்படுத்தி முன்னேறவும் முடியும். எது தேவை என்பது உங்களுக்குத் தெரியும்.