தலையங்கம்

உயிரை காப்பாற்றும் கண்டுபிடிப்புகளே தேவை!

செய்திப்பிரிவு

ஒடிசா மாநிலத்தின் பழம்பெரும் பல்கலைக்கழகங்களில் ஒன்று உத்கல் பல்கலைக்கழகம். நேற்று முந்தைய தினம் பவள விழா கொண்டாடிய இந்த பல்கலைக்கழகத்தில் சிறப்புரை ஆற்றினார் இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த். அப்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் முக்கிய செய்தி ஒன்றை அவர் வழங்கினார். சமூக மாற்றத்துக்கான ஆற்றல் வாய்ந்த கருவி கல்வி. புதிய கண்டுபிடிப்புகளையும் அறிவுலகத்துக்கு புதிய பங்களிப்பையும் செய்வது மட்டுமே கல்வி சார்ந்தவர்களின் கடமை அன்று. மனித சமூகத்துக்கு நன்மை பயக்கும் படைப்புகளை அவர்கள் உருவாக்க வேண்டும். குறிப்பாக விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காக ஆசிரியர்களும் மாணவர்களும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கத்தி மருத்துவரின் கையில் இருந்தால் அறுவை சிகிச்சைக்கு அதை பயன்படுத்தி ஓர் உயிரையே காப்பாற்றுவார். அதுவே கொலைகாரனின் கையில் கிடைத்தால் உயிர்கள் பலிவாங்கப்படும். இப்படித்தான் அறிவியலும் என்பார்கள். ஆனால், அறிவியலாளர்கள் அப்படி இருக்கக் கூடாது. நன்மை தீமை உணர்ந்து அவர்கள் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். நாளைய எதிர்காலமான இன்றைய மாணவர்கள் இந்தக் கூற்றை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

அண்மை காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பல சம்பவங்கள் எளிய மனிதர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இங்கே போதாமை உள்ளது என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. இதற்கு சமீபத்திய சாட்சிகள் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்க முடியாமல் போய் உயிரிழந்த சம்பவம். அதே போன்று சென்னை பெருநகரின் பிரபல மால் ஒன்றில் துப்புரவு தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம். இது போன்று நம்மைச் சுற்றிலும் பல துயரமான சம்பவங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை காப்பாற்றக்கூடிய கண்டுபிடிப்புகளின் போதாமையால் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதை உணர்ந்து ஊர் மெச்சும் கண்டுபிடிப்புகளை விடவும் உயிரைக் காப்பாற்றும் கண்டுபிடிப்புகளே உடனடி தேவை என்பதைப் புரிந்துகொண்டு படியுங்கள் மாணவர்களே!

SCROLL FOR NEXT