அடை மழை பொழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது நம் ஊர் தெருவில் முதலை புகுந்துவிட்டதாக ஒரு வாட்ஸ் அப் வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறது. இது போலி வீடியோ என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இது உண்மையா பொய்யா என்று யோசிக்காமல் எத்தனை பேர் அந்த வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்திருப்போம்? வெள்ள நீர் சூழ்ந்து மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் எத்தனை பேர் அதை கண்டு நடுநடுங்கிப் போயிருப்பார்கள்?
இதுபோன்ற கேள்விகளை நாம் பார்க்கும் வீடியோக்கள், படிக்கும் செய்திகள் குறித்து பெரும்பாலும் நாம் கேட்பதில்லை.
தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ மட்டுமல்ல உலகளவிலேயே இந்த சிக்கல் பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது. பொய்யான செய்திகளை வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பகிர்தல் குறித்து அமெரிக்காவில் 2500 பேரிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு செய்தி போலி என்று தெரிந்த பிறகும் அதற்கு ‘லைக்’ போட்டதுண்டா, பகிர்ந்தது உண்டா அல்லது ஜோடிக்கப்பட்ட செய்திகளை அனுப்பும் நபர்களின் நட்பைத் துண்டித்தது உண்டா போன்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டது.
போலி செய்தி என்று தெரிந்த பிறகும் மீண்டும் மீண்டும் ஒரே செய்தி வலம் வரும்போது ஒரு கட்டத்தில் தன்னை மறந்து அதே செய்தியை தானும் பகிரும் போக்கு பரவலாக காணப்படுகிறது என்ற அதிர்ச்சிகரமாக உண்மை இந்த ஆய்வில் வெளியாகி உள்ளது.
இதென்ன பெரிய பிரச்சினையா என்று தோன்றலாம். ஆனால், இன்றையச் சூழலில் ஒரு நாட்டின் தேர்தல் முடிவையே தீர்மானிக்கும் அளவுக்கு சமூக ஊடகங்கள் வழியாக பரப்பப்படும் பொய் செய்திகளின் தாக்கம் உள்ளது. வாக்குரிமை பெற்று நாட்டின் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் நீங்களே தலைவர்களாக உருவெடுக்கவும் இன்னும் சில ஆண்டுகளே இருக்கின்றன. ஆகையால் இனி போலி செய்தியின் தாக்கம் குறித்து அலட்சியம் வேண்டாம். ஆதாரமற்ற தகவல்களை நம்பாதீர்கள், புரளிகளை ஒரு போதும் பரப்பாதீர்கள். எல்லாவற்றையும் குறுக்கு விசாரணை செய்யுங்கள் அன்பு மாணவர்களே!