இந்தியாவில் உள்ள 50 மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில் ஒருவர்கூட மூன்றாம் பாலினத்தவர் இல்லை என்ற செய்தியை மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் தொலைநிலைக் கல்வி வழங்கி வரும் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 814 மூன்றாம் பாலின மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்களாம்.
கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்தில் ஆணுக்குப் பெண்சமம் என்று மட்டுமே நாம் நெடுங்காலமாக பேசிக்கொண்டிருக்கிறோம். மூன்றாம் பாலினத்தவர் குறித்த அக்கறை இன்னும் வரவில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது? எல்லோரையும் போல மூன்றாம் பாலினத்தவரும் கடின உழைப்பை செலுத்தி படித்தால் முன்னேற போகிறார்கள்.
ஆனால், அவர்கள் அப்படி செய்யாமல் தங்களை தாங்களே மலினப்படுத்தி கொள்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது மிகவும் தவறான புரிதல் மாணவர்களே!சாதாரணமாக எல்லோரும் எதிர்கொள்ளும் சவால்களைப் போல பலமடங்கு சவால்களை மூன்றாம் பாலினத்தவர்கள் தன்னளவிலும் வெளி உலகத்திலும் எதிர்கொள்ளும் சூழல்தான் இன்றளவும் உள்ளது.
தாங்களும் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்க அவர்கள் பல அவமானங்களை, எதிர்ப்புகளை, புறக்கணிபுகளை தாங்கிக்கொள்ள வேண்டி உள்ளது. ஆக்கையால்தான் எப்படியாவது படித்து முன்னேற துடிக்கும் மூன்றாம் பாலினத்தவர்கள்கூட பொதுவெளியில் நடமாடாமல் ஒரே இடத்தில் முடங்கிக் கிடந்து தொலைதூர கல்வியை மேற்கொண்டுவருகிறார்கள்.
அப்படித்தான் தமிழகத்தைச் சேர்ந்த சத்ய ஷர்மிளா இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின வழக்கறிஞரானார், மேற்கு வங்கத்தை சேர்ந்த மானாபி பந்தோபாத்யாயா என்பவர் இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின கல்லூரி முதல்வர் ஆனார். இனியேனும் மூன்றாம் பாலினத்தவரையும் நம்மில் ஒருவராக ஏற்றுக் கொள்வொம். பாலின பாகுபாடற்ற சமூகத்தை உருவாக்குவோம் மாணவர்களே!