அன்பான மாணவர்களே...
இதுவரை எந்த நாடுமே ஆராய்ச்சி செய்யாத, நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. அதன் விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் நிலவில் விழுந்து செயலிழந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியும். லேண்டர் எங்கு விழுந்தது என்பதை இஸ்ரோ, அமெரிக்காவின் நாசா ஆகியவற்றால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சண்முக சுப்பிரமணியனின், உன்னிப்பாக கவனிப்பும் உறுதியான கேள்வியும் லேண்டரை கண்டுபிடிக்க உதவியுள்ளது. இவர் லேண்டர் தொடர்பாக நாசா வெளியிட்ட புகைப்படங்களை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார்.
மிக குறைந்த பிக்ஸல் கொண்ட புகைப்படங்களை ஆர்வமாகவும் உன்னிப்பாகவும் ஆராய்ந்து ஒரு இடத்தை குறிப்பிட்டு, அது விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களாக இருக்கலாம் என்று நாசாவுக்கு ட்விட்டரில் பல குறுந்தகவல்கள் அனுப்பி உள்ளார்.
அத்துடன், அவர் குறிப்பிட்ட இடத்தில் வித்தியாசமாக இருக்கும் பொருள், விக்ரம் லேண்டர் இல்லை என்றால், அது என்ன வேற்றுகிரகவாசியா (ஏலியன்) என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அந்தக் கேள்விக்குப் பிறகுதான் நாசா இன்னும் தீவிரமாக ஆராய்ந்து, அது லேண்டரின் சிதைந்த பாகங்கள்தான் என்று உறுதி செய்துள்ளது.
இத்தனைக்கும் அவர் விண்வெளி ஆராய்ச்சியாளர் இல்லை. நிலவின் படங்களை படித்தறியும் விதம், பார்க்கும் விதம், லேண்டர் தரையிறங்கிய வேகம், திசை என எல்லாவற்றையும் ஆர்வமாக ஆராய்ந்து பார்த்துள்ளார்.
அதன் பலன்தான் இன்று அவர் உலகளவில் புகழ்பெற்றுள்ளார். இதற்குப் பின்னால் இருப்பது அவருடைய ஆர்வம் ஒன்றுதான். ஆர்வமாக அணுகிப் பாருங்கள்... எல்லாமே கைகூடும் மாணவர்களே.