ஐஐடி காரக்பூர் மற்றும் ஐஐடி காந்திநகரைச் சேர்ந்த பேராசிரியர்கள் அறிவியல் அருங்காட்சியகங்களின் தேசிய கழகத்துடன் இணைந்து காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை சிறப்பிக்க திட்டமிட்டுள்ளனர். எவ்வாறு சிறப்பிப்பது?
காந்தியடிகள் ஆற்றிய உரைகள், அவர் எழுதிய கடிதங்கள், 40-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் யாவும் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ‘காந்திபீடியா’ என்ற தளத்தை வடிவமைத்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பட்டத்தை பயன்படுத்தி இதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நவீனமயத்தை எதிர்த்த காந்தியடிகளின் சிந்தனையைச் செயற்கை நுண்ணறிவு என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தின் வழியாகப் பாதுகாக்கப் போகிறார்களா? காந்திய சிந்தனைகளை விளக்கும் போது பொதுவாக அவர் நவீனத் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர் என்பார்கள்.
ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் டிராக்டர் அறிமுகமான போது அதை அவர் எதிர்த்தார். அதே நேரத்தில் கடும் பாடுபட்டு தொழிற்சாலைகளில் பணிபுரியும் உழைப்பாளிகளின் வேலை பளுவை குறைக்கக் கூடிய இயந்திரங்களின் வரவை அதை வரவேற்றார்.
1946 செப்டம்பர் 15 அன்று வெளிவந்த ஹரிஜன் இதழில், இவ்வாறு எழுதினார் காந்தியடிகள்: இயந்திரங்களை நான் எதிர்க்கும் விதம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நான் இயந்திரங்களுக்கு எதிரானவன் அல்ல. மாறாக பலருடைய வேலையை பறிக்கக்கூடிய கருவிகளின் பயன்பாட்டையே எதிர்க்கிறேன்.
ஆமாம் மாணவர்களே நீங்களும் எதையும் கண்மூடித்தனமாக ஏற்கவும் வேண்டாம் நிராகரிக்கவும் வேண்டாம். எல்லாவற்றையும் பகுத்தறியப் பழகுங்கள்.