தலையங்கம்

நாவினால் சுட்ட வடு ஆறாது

செய்திப்பிரிவு

அன்பு மாணவர்களே...

நண்பர்களை அழைப்பதற்கு, கேலி செய்வதற்கு, திட்டுவதற்கு நீங்கள் என்ன வார்த்தையை பயன்படுத்துவீர்கள். நிச்சயம் அது நல்ல சொல்லாக இருக்காது. அப்படிதானே. அதை உங்கள் பெற்றோர் முன்போ, ஆசிரியர் முன்போ உங்களால் பேச முடியுமா? முடியாது என்றால், அதை ஏன் பயன்படுத்துகிறீர்கள்.

கெட்ட வார்த்தை என்ற சொல்லிலேயே அதன் பொருள் இருக்கிறதே. உங்கள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் 2 விளைவுகளை ஏற்படுத்தும். ஒன்று உங்களைப் பற்றிய மதிப்பை உயர்த்தும். மற்றொன்று உங்கள் மீது கோபத்தைத் தூண்டும். நூற்றுக்கு 80 சதவீதம் கெட்ட வார்த்தையை ஆண்கள் தான் பொது வெளியில் பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.

ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு சக்தி உண்டு. அமைதியானவர்களை கூட ஆவேசப்பட வைக்கும். ஆவேசப்படுபவர்களைக் கூட அமைதியாக்கும். எல்லாமே உங்களுடைய சொல்லில் தான் இருக்கிறது. சில குடும்பங்களில் குழந்தைகள் முன்பாகவே பெற்றோர் சரளமாக கெட்ட வார்த்தை பேசுகின்றனர்.

அப்படி உங்கள் பெற்றோர் பேசினால், அப்படி பேசாதீர்கள் என்று தைரியமாக சொல்லுங்கள். உங்கள் பெற்றோரை நல் வழிப்படுத்தும் கடமை உங்களுக்கு உள்ளது.

நீங்கள் அன்றாடம் பேசும் கெட்டவார்த்தையின் அர்த்தத்தை ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள்... அது எவ்வளவு கேவலமானது என்று உங்களுக்கு தோன்றும். தவறான வார்த்தைகளில் பேசும்போது, நல்ல உறவுகளை, நல்ல நண்பர்களை இழந்து விடுவீர்கள். அது வடுவாகவே இருக்கும் என்பதை மறக்காதீர்கள்.

எத்தனையோ குழந்தைகள் பேச முடியாமல் மாற்று திறனாளிகளாக பிறக்கின்றனர். ஆனால், மனிதம் என்ற ஒரு உன்னத பிறப்பில் அருமையான தமிழ் மொழியை கொண்ட நாம் கெட்ட வார்த்தை பேசுவது சரியா என்று நினைத்து பாருங்கள்.3

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

SCROLL FOR NEXT