மொத்தம் 199 நாடுகளில் சாலை பாதுகாப்பில் இந்தியா மிகவும் பாதுகாப்பற்ற நாடாக திகழ்கிறது. இந்திய மாநிலங்களில் தமிழகம் சாலை விபத்து சம்பவங்களில் முதலிடம் வகிக்கிறது. சாலை விபத்துக்களில் 2018-ல் மட்டும் 1.5 லட்சம் இந்தியர்கள் மரணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விடவும் 2.4 சதவீதம் சாலை விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வேகத்தில் வண்டி ஓட்டுவதும், சாலையில் தவறான பக்கத்தில் வாகனங்களை செலுத்துவதும் விபத்து நிகழ்வதற்கான பிரதான காரணங்களாக கூறப்பட்டுள்ளது. இது தவிரஅலைப்பேசியில் பேசியபடியே வண்டி ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது ஆகியவையும் விபத்து ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பெரும்பாலான இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கல்வி, மற்றும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது தமிழகம். ஆனால், சாலை பாதுகாப்பில் மிகவும் பின்தங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இதனால் இளையோர் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கூடுதல் வருத்தத்துக்குரிய விஷயமாகும்.
இதற்கு தீர்வு சாலை பாதுகாப்பு குறித்த கல்வி நம்முடைய பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். இதை பள்ளியில் சொல்ல தர முடியுமா என்று கேட்கலாம். ஆனால், நமக்கு முன்னோடியாக சாலை பாதுகாப்பு கல்வியில் எட்டு ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டால் இந்த கேள்வி எழாது.
இத்தாலியில் சாலை விதிகள் மற்றும் அது தொடர்பான மருத்துவ முதலுதவி குறித்து தகவல்கள் ஆரம்ப பள்ளிக் குழந்தைகளுக்கே சொல்லித் தரப்படுகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் மிதிவண்டி ஓட்டும் பயிற்சியானது இரண்டாண்டுகள் வரை ஒவ்வொரு ஜெர்மனி நாட்டு மாணவருக்கும் அளிக்கப்படுகிறது.
பாடத்திட்டமாக்கப்படும் வரை சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் இளம் வயதினர் மனதில் பதியாது. ஆகையால், சாலை பாதுகாப்பு குறித்த கல்வியை அறிமுகப்படுத்துவோம் பாதுகாப்பாக வாழ்வோம்.