ஒரு காலத்தில் புகைப்படம் எடுத்தால், ஆயுள் குறையும் என்று சொன்னார்கள். இப்போது மொபைல் போன்கள் அதிகரித்துள்ள நிலையில், தனக்குத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதை ‘செல்பி’ என்று நாகரிகமாகச் சொல்லிக் கொள்கின்றனர். அடிக்கடி செல்பி எடுப்பது மனநோயின் அறிகுறி என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
‘செல்பி’யின் அடுத்தகட்டமாக மிக உயர்ந்த இடங்கள், தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும் ஆறுகள், மலை உச்சி போன்ற இடங்களில் செல்பி எடுக்க போய் விழுந்து இறப்பவர்கள் குறித்து அடிக்கடி செய்திகள் வருகின்றன. அந்த கடைசி நிமிட வீடியோ காட்சிகளும் மனதை பதைபதைக்க வைக்கின்றன. அப்படி இருந்தும் இளைஞர்களால் ஏன் எச்சரிக்கையாக இருக்க முடியவில்லை.
துணிச்சல், சாகசம் என்று பெயர் எடுப்பதால் எந்த பலனும் இல்லை. அதனால் சாதிக்கப் போவது எதுவும் இல்லை.
உங்களை வளர்க்க பெற்றோர் எவ்வளவு துன்பங்களைத் தாங்கிக் கொள்கின்றனர். நீங்கள் மகிழ்ச்சியாக, எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக எத்தனை உண்மைகளை உங்களிடம் இருந்து மறைக்கின்றனர். எனவே, நண்பர்களுடன் வெளியில் செல்லும் போதும் அல்லது நண்பர்கள் தூண்டி விடுவதாலும் கட்டுப்பாடுகளை இழந்து விடாதீர்கள். ‘ஜாலி’யாகஇருப்பது வேறு; கட்டுப்பாடு இழந்து நடந்து கொள்வது வேறு.
சிந்தித்துப் பாருங்கள் மாணவர்களே... நீங்கள் ஏராளமாக செல்பிஎடுக்கிறீர்கள். அவற்றில் எத்தனை படங்களை பயன்படுத்துகிறீர்கள்? ஒன்றிரண்டு படங்களை பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் போடுவீர்கள். மற்றவை...?விலைமதிப்பற்றது உயிர்.