தலையங்கம்

விளையாட்டாக படிக்கலாம்!

செய்திப்பிரிவு

பி.எச்டி. எனப்படும் முனைவர் பட்டம் பெறுவதுதான் கல்வியியலில் உயரிய தகுதியாக கருதப்படுகிறது. இதை மேற்கொள்ளத் தேர்ந்தெடுத்த துறை குறித்த ஆழ்ந்த அறிவுத் தேடலும், ஆராய்ச்சி மனப்பான்மையும், கடின உழைப்பும் அத்தியாவசியம். பொதுவாக, ஆராய்ச்சி மாணவர்கள் என்றாலே புத்தக புழுவாக இருப்பார்கள். யாருடனும் பழக மாட்டார்கள். அவர்களுக்கென எந்த பொழுதுபோக்குமே இருக்காது என்ற கெட்டி தட்டிப்போன பார்வை உள்ளது. அப்படியெல்லாம் இல்லை!

மிகவும் கலகலப்பாகப் பழகக்கூடியவர்களாகவும், விளையாட்டு, பொது அறிவு போன்ற பிற துறைகளில் ஆர்வம் மிக்கவராகவும் அதே நேரத்தில் தீவிர ஆராய்ச்சி அணுகுமுறை கொண்டவராகவும் ஒருவர் திகழ முடியும். அப்படிப்பட்டவர்தாம் குஜராத் சூழலியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இளம் ஆராய்ச்சியாளரான பிரஜாபதி. இவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

முனைவர் பட்ட ஆராய்ச்சியின் போது தான் கண்டறிந்த இரண்டு புதிய வகை சிலந்திகளில் ஒன்றுக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரைச் சூட்டி இருக்கிறார். தனக்கு படிப்பில் எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு கிரிகெட்டும் பிடிக்கும் என்பதால் இப்படி தான் செய்ததாக பிரஜாபதி சொல்கிறார். கல்வியை போன்றே விளையாட்டின் மீதும் எத்தகைய ஈடுபாடு கொண்டவர் இவர் என்பதற்கு உதாரணம் இந்த பெயர்சூட்டு சம்பவம் எனலாம்.

இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தினர் படிப்பைத் தவிர வேறெதைப் பற்றியும் தெரிந்து கொள்ளக் கூடாது. அப்படி வேறொன்றில் கவனம் செலுத்தினால் கல்வியில் சிறக்க முடியாது என்ற பொத்தாம் பொதுவான பார்வை காலங்காலமாக ஊறிபோய் இருக்கிறது. ஆனால், வளரிளம் பருவத்தில் மாணவர்களிடம் மிதமிஞ்சிய ஆற்றல் திரண்டிருக்கும். அதற்கு படிப்பு மட்டுமே வடிகாலாக இருந்துவிட முடியாது. அப்போது விளையாட்டு, கலை உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கில் ஈடுபட்டால் மாணவர்களால் மென்மேலும் உயர முடியும்.

SCROLL FOR NEXT