‘தண்ணீர் மணி’ அடிக்கும் வழக்கத்தை திருச்சியில் உள்ள ஒரு அரசுப் பள்ளி சில மாதங்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்தியது. அதென்ன ‘தண்ணீர் மணி’? மாணவர்களுக்கு அவ்வப்போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவே இந்தத் திட்டம். இதை தமிழகத்தில் உள்ள பிற பள்ளிகள் பின்பற்றத் தொடங்கிவிட்டனவா! தெரியவில்லை. ஆனால், நம் அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் தொடங்கிவிட்டன.
தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க போகிறார்கள். இதற்கெதற்கு திட்டம் என்று யோசிக்க வேண்டாம். நாளொன்றுக்கு 1.5 லிட்டரில் இருந்து 3 லிட்டர் தண்ணீர் வரை மாணவப் பருவத்தினர் குடிப்பது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியம் என்கிறது மருத்துவம். போதுமான நீர் பருகாவிட்டால் தலைவலி, தலைச் சுற்றல், உடற் சோர்வு, கவனக்குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை நம் பள்ளி மாணவ, மாணவிகள் போதுமான அளவு பருகுவதில்லை என்பதே நிதர்சனம். ஏன்? போதுமான விழிப்புணர்வு இல்லாதது ஒரு காரணம் மட்டுமே. முக்கியமான காரணம் என்னவென்றால், சுகாதாரமான கழிப்பிட வசதி பல பள்ளிக்கூடங்களில் இல்லை. இதனால் மாணவர்களை விடவும் மாணவிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லாத பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகள் சரியாகத் தண்ணீர் பருகுவதில்லை. இந்நிலையில், நீர் சத்து குறைந்துவிடுதல், சிறுநீர் தொற்று நோய் போன்ற ஆரோக்கிய சீர்கேடுகளுக்கு ஆளாகிறார்கள்.
ஆகையால், ‘தண்ணீர் மணி’-யை அறிமுகப்படுத்தும் அதே வேளையில் நம்முடைய அனைத்து பள்ளிக்கூடங்களும் சுகாதாரமான கழிப்பிட வசதியையும் மாணவர்களுக்கு உறுதி செய்ய வேண்டும்.