கல்வியின் வாசம் அறியாத ஒருவரைப் படிக்க வைத்து, சமூகத்தில் உயரிய நிலைக்கு உயர்த்திவிடுவதில் பள்ளிக்கூடத்துக்கு மிகப் பெரிய பங்குள்ளது. அப்படி நம்மை வளர்த்தெடுக்கும் பள்ளிக்கு நாம் பதிலுக்கு என்ன செய்கிறோம், செய்யப்போகிறோம்?
சிறுவயது மாணவரான என்னால் என்ன செய்துவிட முடியும் என்று தயங்க வேண்டாம் மாணவர்களே! உங்களுக்கும், ஏன் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் அற்புத செயலை செய்திருக்கிறார் 10-ம் வகுப்பு மாணவர் தேஜஸ். கர்நாடகம் மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த கடகா கிராமத்து அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் இவர்.
தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய அறிவுத் திறன் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையாக இவர் வென்றிருக்கிறார். இந்த தொகையில் இருந்து கணிசமான பகுதியை தன்னுடைய பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுப்பதற்காக செலவழிக்க முடிவெடுத்திருக்கிறார்.
தான் படிக்கும் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் கால்நடைகள் புகுந்து செடிகளை மேய்ந்துவிடுவதைப் பார்த்து வருந்தி இருக்கிறார் தேஜஸ். ஆகையால், தனக்கு அறிவூட்டி போட்டியில் வெல்லக் காரணமாக இருந்த தன்னுடைய பள்ளிக்கு இந்த வகையில் நன்றிக்கடன் செலுத்தவிருக்கிறார்.
நீங்களும் உங்களுடைய பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் எப்படி நன்றி செலுத்தலாம் என்று யோசித்துப் பாருங்கள் மாணவர்களே. தேஜஸைப் போல பணம் செலவழிக்க வேண்டும் என்பதில்லை. முதலாவதாக உங்களுக்கு கற்றுத் தரப்படும் பாடங்களை முறையாகப் படித்து நல்லறிவையும், ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொண்டு சிறந்த மாணவராக உருவாகுங்கள். அதுவே உங்களுடைய மற்றும் உங்கள் பள்ளியின் சிறப்பை உலகறியச் செய்யும்!