மாணவிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும் பாலினம் குறித்த நுண்ணுணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தவும் சிறப்பு மையத்தைத் தொடங்கும்படி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டு கொண்டிருக்கிறோம். பெண்கள் இவ்வாறு சாதிக்க முக்கிய காரணம் கல்விதானே! அதே நேரத்தில் நம்முடைய கல்வி நிலையங்களிலேயே ஆணுக்கு சமமாகப் பெண்கள் நடத்தப்படுவதில்லை என்பதைத்தான் இந்த செய்தி உணர்த்துகிறது இல்லையா மாணவர்களே!
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கே இந்த நிலை என்றால் பிரச்சினையின் ஊற்றுக்கண் எங்குள்ளது என்று யோசிக்க வேண்டும். பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்களும் மாணவிகளும் இணையாக நடத்தப்பட வேண்டும். தன்னுடன் படிக்கும் சக மாணவி தனக்கு இணையானவளே, தன்னை போலவே அவளுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த புரிதலை ஏற்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் உள்ளது. குறிப்பாக வளரிளம் பருவத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் நண்பர்களாக பாவித்துப் பழக அனுமதிக்க வேண்டும்.
இருபாலர் பள்ளிகள்கூட எட்டாம் வகுப்புக்கு மேல் மாணவ, மாணவிகளை தனித்தனி வகுப்பறைகளில் பிரித்து கல்வி கற்பிக்கும் வழக்கம் இங்கு பல பள்ளிகளில் பரவலாக உள்ளது. ஒழுக்க நடவடிக்கையாக இதை முன்னெடுக்கும் பள்ளிகளும் ஆசிரியர்களும் ஒன்றை யோசிக்க வேண்டும். இன்று வகுப்பறைக்குள் பிரித்து வைக்கப்படுபவர்கள் நாளை சமூகத்தில் ஒருவரை மற்றொருவர் எப்படி சகஜமாக அணுக முடியும்?