தலையங்கம்

தேர்வுக்கு தயாராகுங்கள்

செய்திப்பிரிவு

எட்டாம் வகுப்பு வரை மாணவர் தேர்ச்சி நிறுத்திவைக்கப்படாது என்ற இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு முதல் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. கல்வித் தரத்தை உயர்த்தவே இம்முடிவை எடுத்திருப் பதாக அரசு கூறுகிறது. ஏற்கெனவே கற்றதை சோதிப்பதற்கான வழிதான் தேர்வு. அதுவே தரத்தை உயர்த்துவதற்கான வழிமுறையாக முடியாது. 8-வது படிக்கும் சராசரி இந்திய மாணவருக்கு 3-ம் வகுப்புக்குரிய படிப்பறிவுதான் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது (இதற்கு தனியார் பள்ளி மாணவர்களும் விதிவிலக்கல்ல). இருப்பினும் இந்த நிலைக்கு மாணவர்களை மட்டுமே பழி சொல்லிப் பயனில்லை. போதுமான ஆசிரியர் நியமனத்தில் தொடங்கி கல்வி கற்பிக்கப்படும் முறை வரை பல அடுக்குகளில் இந்த சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டி இருக்கிறது. மாணவர்கள் இப்படியான பொதுத் தேர்வு முறையைக் கண்டு பயப்பட தேவை இல்லை.

முதல் கட்டமாகத் தேர்வுக்குத் தயாராக ஒரு அட்டவணையை எழுதி, அதை பின்பற்றத் தொடங்குங்கள். உங்களை பொருத்தவரை தேர்வறை மட்டும்தான் மாறவிருக்கிறது. மற்றபடி நீங்கள் எப்போதும்போல உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் படிப்பைத் தொடருங்கள். தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு ஆசிரியர்களிடம் தெளிவு பெறுங்கள். சக மாணவர்களுக்கு இடையில் பேசி தங்களைத் தாங்களே குழப்பிக் கொள்ள வேண்டாம். பாடத்திட்டத்தில் உள்ளவற்றை முழுவதுமாக புரிந்து படிப்பது நல்லது. சரியான பதில்களை எழுதுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு கையெழுத்தும் அழகாக இருக்க வேண்டும். அதற்குத் தேவை தொடர் பயிற்சி மட்டுமே. நம்பிக்கையோடு தேர்வுக்குத் தயாராகுங்கள்.

SCROLL FOR NEXT