பத்து ஆண்டுக்கு முன்பு, கணினி அறிவியலில் சி, சி ++,ஜாவா ப்ரோகிராமிங் தெரிந்த அத்தனை இந்திய இளைஞர்களுக்கும்
ஐடி நிறுவனங்களில் வேலை காத்திருந்தது. ஆனால், சமீபகாலமாக நாம் அடிக்கடி கேள்விப்படும் செய்தி, திறன் போதாமையால்
இன்றைய பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதுதான். பொறியியல் பட்டதாரிகள் முதல் கலை அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள்வரை இந்த குறை சொல்லப்படுகிறது. அப்படி என்ன திறனில் நம்முடைய மாணவர்களும் இளைஞர்களும் குறைவைத்தார்கள்?
இந்த கேள்விக்கான விடையை அளித்துள்ளது, அண்மையில் வெளியாகி இருக்கும் எக்ஸ்பெரிஸ் ஐடி பணிவாய்ப்பு ஆய்வறிக்கை. செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா போன்ற அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, அடிப்படை தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளை இயந்திரங்களே செய்துவிடும் காலத்துக்கு நாம் வந்துவிட்டோம். ஆகையால் இனி நம்முடைய மாணவர்கள் வெறுமனே தொழில்நுட்பத்தை மட்டும் கற்றுக்கொண்டுவந்தால் போதாது. இதுபோக தலைமைப் பண்பு, கூர்மையான விமர்சன பார்வை, தர்க்க ரீதியாகப் பிரித்தறியும் ஆற்றல், சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன் ஆகியவை வேண்டும் என்று கோடிட்டுக் காட்டுகிறது இந்த அறிக்கை.
ஆம் மாணவர்களே, கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று மட்டும் பொத்தாம் பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், காலத்துக்கு ஏற்ப அதற்கான பொருள் மாறுபடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.இன்றைய சூழலில், தொழில்நுட்பத்தில் மட்டும் திறமைசாலியாக இருந்தால் போதாது. பல திறன்களை வளர்த்துகொண்டு திறமைசாலியாக மாற வேண்டியது அவசியம்.