அன்பான மாணவர்களே...
மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடந்தது உங்களுக்குத் தெரியும். அப்போது மாமல்லபுரம் கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகளை கைகளில் சேகரித்து அப்புறப்படுத்தினார். அந்தக் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். நாடு தூய்மையாக இருந்தால், மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். சுற்றுச்சூழல் கெடாது. அதற்காகத்தானே, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு பிரபலப்படுத்தியது.
உங்கள் வீட்டில் பொருட்களை தாறுமாறாக போட்டிருந்தால், பெற்றோர்கள் திட்டுகிறார்கள். வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால், வெளியில் வந்தவுடன் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் எல்லாவற்றையும் சாலைகளில் வீசியெறிகிறோம். இனி அப்படி செய்யாதீர்கள். அவற்றை குப்பைத் தொட்டியில் போடுங்கள்.
வெளிநாட்டு நகரங்களின் படங்களைப் பார்க்கும் போது ரம்மியமாக இருக்கிறது என்று பேசுவோம். அதுபோல் நமது நகரத்தையும் மாற்ற முடியும். அது நம் ஒவ்வொருவரின் சுகாதார விழிப்புணர்வில் இருக்கிறது. சுற்றுப்புற தூய்மை நமது உடல்நலனையும் பாதுகாக்கும். நாம் அலட்சியமாக வீசி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று பல கடல் உயிரினங்கள் இறக்கின்றன. ஆடு, மாடுகள் பாதிக்கப்படுகின்றன.
நிலம் சீரழிகிறது. இன்னும் பல பல பாதிப்புகள்... சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மட்டுமல்ல, எந்தக் குப்பைகளையும் வெளியில் வீசாதீர்கள். அவற்றை குப்பைத் தொட்டியில் போட பழகுங்கள். நமது இந்தியாவும் அழகாகிவிடும்.