தலையங்கம்

தவறை சுட்டிக்காட்டுபவன் ‘நண்பேன்டா’

செய்திப்பிரிவு

அன்பான மாணவர்களே...

பள்ளியில் சந்திக்கும் போது சிரித்து சிரித்துப் பேசிப் பிரிவதும், மாலையில் எங்காவது கூடி பொழுதைப் போக்குவதும்தான் நட்பா. அப்படி நேரத்தை செலவிடுபவர்கள்தான் நண்பர்களா. ‘உன் நண்பர்களைப் பற்றி சொல், உன்னைப் பற்றி சொல்கிறேன்’ என்று கூறுவார்கள். உன்னுடன் பழகும் நண்பர்களை வைத்துதான், நீ யார் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கின்றனர். மறந்துவிடாதீர்கள்.

நீ தவறு செய்யும் போது சுட்டிக் காட்டுபவன்தான் உண்மையான நண்பன். அல்லது நண்பர்கள் தவறு செய்யும்போது நீ சுட்டிக் காட்டினால், நீ நல்ல நண்பன். சுட்டிக் காட்டப்படும் தவறை நீ திருத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் விலகி செல்வார்கள். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு, கடினமான நேரங்களில் உனக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருப்பவர்கள் யார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அந்த நட்பை இன்னும் பலப்படுத்துங்கள்.

எது தவறு எது சரி என்பதை நண்பர்கள் வட்டாரங்களில் நடக்கும் சம்பவங்களை வைத்து நீங்களாக ஒரு நல்ல முடிவெடுங்கள். அல்லது உங்கள் பெற்றோரிடம் கூறி யோசனை கூறுங்கள். நட்பைப் பற்றி திருவள்ளுவர் ஒரு அதிகாரமே வைத்துள்ளார்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு நாம் அணிந்திருக்கும் உடை நழுவும் போது, நம்மையும் அறியாமல் கைகள் சென்று அதை சரி செய்கிறது. அதுபோல கடினமான நேரங்களில் தானாக வந்து உதவுபவன்தான் நண்பன். புரிந்து கொள்ளுங்கள்.

SCROLL FOR NEXT