இந்திய சாலைகளில் 2011-ம் ஆண்டில் 14 கோடி மோட்டார் வாகனங்கள் ஓடிய நிலையில் 2023-ல் 34 கோடியாக அது அதிகரித்துவிட்டதாக போக்குவரத்து குறித்த சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
கடுமையான போக்குவரத்து நெரிசல் இல்லாத பெருநகரங்கள் இந்தியாவில் இல்லை. இதனால் காற்று மாசுபாடு, விபத்து, உடல்நல சீர்கேடு என சங்கிலித் தொடராக பல்வேறு பாதகங்களை சந்தித்து வருகிறோம். மூன்று நிமிடங்களுக்கு ஒரு சாலை விபத்து 2022-ல் இந்தியாவில் நிகழ்ந்து அதனால் 1.68 லட்சம் உயிர்களை பறிகொடுத்துவிட்டோம். ஆனாலும் இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
படித்து பெரிய மனிதராக உயர்ந்து கை நிறைய சம்பாதித்து சொந்த வீடு, கார் வாங்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளை வளர்த்ததன் விளைவைத்தான் இன்று எதிர்கொண்டு வருகிறோம்.
சமீபகாலமாக மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருவதால் இந்தியா முழுவதும் நாளொன்றுக்கு 1 கோடி மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனர். சென்னையில் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 25 லட்சம் பேர் மெட்ரோ மூலம் அனுதினம் பயணம் செல்கின்றனர். இதுதவிர பேருந்துகளும், உள்ளூர் ரயில்களும் லட்சக்கணக்கான மக்களின் போக்குவரத்துக்கு நாள்தோறும் உதவுகின்றன. மேலும்பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து அமைப்பை அரசுகள் பலப்படுத்தி பொதுமக்கள் அவற்றின் மூலம் பயணிப்பது மட்டுமே ஒரே தீர்வு.
இத்தகைய பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவது வறுமையின் அடையாளம் அல்ல பெருமை என்ற உணர்வை இனி குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டியதும் நமது கடமை.