தலையங்கம்

இயற்கையை நேசிக்கும் இளையோர்

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த ரமேஷ் மாறன், விஷ்ணு வர்தன் எனும் இரண்டு பழங்குடி இளைஞர்களுக்கு இங்கிலாந்து மன்னர் சார்லஸ், இங்கிலாந்தின் மதிப்புமிக்க ‘மார்க் ரொலாண்ட் ஷண்ட்’ விருது வழங்கி கவுரவித்திருக்கிறார்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பாச பந்தத்தை படமாக்கிய ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்துக்கு இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த படத்தின் பெண் இயக்குநரான கார்த்திகி கொன்சால்வஸ் என்பவரும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரே. உலகப் புகழ் அடைந்த இயக்குநர் கார்த்திகிக்கு விருது வழங்கி கவுரவித்த இங்கிலாந்து மன்னர், நீலகரி பெட்டா குரும்பா பழங்குடி இளைஞர்களுக்கும் எதற்காக விருது வழங்கினார் தெரியுமா?

பசுமையான நீலகிரி மலைப்பகுதியில் லந்தனா கமாரா எனும் எதற்கும் பயன்படாத களை செடிகளும் அதிகம் விளைந்துள்ளன. இவற்றால் அப்பகுதியில் மண் வளமிழக்கிறது, நிலத்தடி நீர் வீணாகிறது, விவசாயம் செய்ய முடியாமல் போகிறது, ஒட்டுமொத்த உணவு சங்கிலியே பாதிக்கப்படுகிறது. இத்தகைய லந்தனா கமாரா செடிகளை களை பிடுங்கி அவற்றை கொண்டு பிரமாண்ட யானை சிலைகளை ரமேஷ், விஷ்ணு உள்ளிட்ட நீலகிரியின் இளைஞர்கள் பலர் வடித்து வருகிறார்கள். இந்த சிலைகளை விற்பனை செய்வதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அந்த பணத்தை மீண்டும் யானைகளின் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் இந்த இளைஞர்கள் செலவிடுகிறார்கள். பாதகத்தைக் கூட சாதகமாக்க முடியும் என நிரூபித்திருக்கும் இந்த இளைஞர்கள் தற்போது சர்வதேச விருதால் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT