பள்ளி மாணவர்களுக்கான ‘புன்னகை’ பல் பராமரிப்புத் திட்டம் தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘புன்னகை’ என்ற புதிய திட்டத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த பல் பராமரிப்பு திட்டம் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களுக்கு ஏற்படும் பல் உள்ளிட்ட வாய் சார்ந்த நோய்களைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் மற்றும் வாய்வழி நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனை, பல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஆகியன இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ’புன்னகை’ திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது.
இன்றைய மாணவர்களிடம் அழகு குறித்த ஆர்வம் சிறுவயதிலேயே வெளிப்படுகிறது. அதே அளவுக்கு ஆரோக்கியத்தின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் அவசியமாகிறது. குழந்தைகளையும் சாக்லேட், கேக், இனிப்பு வகைகள் மீதான பிரியத்தையும் பிரித்துப் பார்க்க முடியாதுதான். அதேநேரம் வாய்தான் நம் ஆரோக்கியத்துக்கான நுழைவாயில். ஆகையால் நாள்தோறும் காலையிலும் இரவிலும் பல்துலக்கி, சுவையுடன் சத்தும் சுகாதாரமும் மிகுந்த உணவை சாப்பிட்டு, ‘புன்னகை’ திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால் அனைத்து மாணவச் செல்வங்களின் முகத்திலும் நிச்சயம் ஆரோக்கிய புன்னகை பூக்கும்.