வெற்றிக் கொடி

பல பிரபஞ்சங்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் | அணு முதல் அண்டவெளி வரை 29

என்.சுஜாதா

எப்போதுமே தன் அடை யாளத்தை மறைத்து, முக மூடி அணிந்தபடி தாவும், ஸ்பைடர்மேன் யாரென்று எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. செய்தி அலைவரிசைகள் முதல் சமூக ஊடகங்கள்வரை இவரைப் பற்றியே பேசுகின்றன.

இதனால், ஸ்பைடர்மேனின் வாழ்க்கை மட்டுமல்லாமல், அவன் அத்தை மே, நண்பன் நெட், தோழி எம் ஜே ஆகியோரின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனால் அனைவரும், இவன்தான் ‘ஸ்பைடர்மேன்’ என்பதை மறந்து விட வேண்டுமென்று ஸ்பைடர்மேன் நினைக்கிறான்.

அதற்காக டாக்டர் ஸ்ட்ரேஞ்சை நாடி, “உலகத்தில் உள்ள அனைவரும் நான் ஸ்பைடர்மேன் என்பதை மறந்துவிட வேண்டும்” என்று வேண்டுகிறான். டாக்டர் ஸ்ட்ரேஞ்சும் அதற்காக ஒரு சக்திவாய்ந்த மந்திரத்தை உருவாக்கத் தொடங்குகிறார்.

ஆனால், ஸ்பைடர் மேனோ, நடுநடுவே, என் அத்தைக்கு மட்டும் என்னைப் பற்றிய ஞாபகம் இருக்க வேண்டும், அதேபோல என் நண்பனுக்கு, எம்ஜேவுக்கு என்று தன் கோரிக்கையை மாற்றிக்கொண்டே இருக்கிறான்.

அதனால் மந்திரம் கன்னா பின்னாவென்று வேலை செய்து, பிரபஞ்சங்களுக்கு இடையே இருக்கும் எல்லைகள் உடைந்துவிடுகின்றன. இதனால், வெவ்வேறு பிரபஞ்சங் களில் (Multiverse) வாழ்ந்த ஸ்பைடர் மேன்களும், அவர்களது உலகங்களின் வில்லன்களும், ஒரே பிரபஞ்சத்தில் ஒன்றுகூடுகின்றனர்.

அதாவது இது வரை தனித்தனியாக வெளிவந்த ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் ஒவ்வொன்றும், வெவ்வேறு பிரபஞ்சங் களில் நடந்த கதைகள் என்கிற இணைப் பிரபஞ்சங்களின் கருத்தாக மார்வெல்லின் ‘ஸ்பைடெர்மேன் - நோ வே ஹோம்’ (Spider-Man: No Way Home) திரைப்படம் சுவாரசியமாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இது வெறும் ஹாலிவுட்டின் கற்பனையா அல்லது நவீன இயற்பியலும் இதைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்கிறதா?

துல்லிய ஒழுங்கமைப்பு

இயற்பியலாளர்களுக்கு நீண்ட காலமாக ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது. நமது பிரபஞ்சத்தில் உள்ள அடிப்படை மதிப்புகள் அனைத்தும் உயிர்கள் தோன்றுவதற்கு ஏற்றவாறு துல்லியமாக அமைந்திருப்பது எப்படி? ஈர்ப்புவிசை இன்னும் கொஞ்சம் பலவீனமாக இருந்திருந்தால் விண்மீன்களே உருவாகி இருக்காது. அது கொஞ்சம் வலிமையாக இருந்திருந்தால், நட்சத்திரங்கள் மிக விரைவில் அழிந்திருக்கும்.

புரோட்டான்-எலெக்ட்ரான்களின் நிறை விகிதம் மாறினால் அணுக்களின் நிலைத்தன்மையையும் தனிமங்களின் உருவாக்கத்தையும் முற்றிலும் சிதைத்து விடும்.

இந்த மதிப்புகள் அனைத்தும் இவ்வளவு சரியாக இருப்பது ஏன்? இப்படிப்பட்ட ‘துல்லிய ஒழுங்கமைப்பு’ (Fine-tuning) எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? ஒருவேளை, நமது பிரபஞ்சம் ஒன்றே ஒன்றாக இல்லாமல், எண்ணிலடங்கா பிரபஞ்சங்களில் ஒன்றாக இருந்தால்? ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் அடிப்படை மாறிலிகளின் (constant) மதிப்பு வெவ்வேறாக இருந்தால்?

குமிழ் பிரபஞ்சங்கள்

இணைப்பிரபஞ்சங்களைப் பொறுத்த வரை நிறையக் கருத்தாக்கங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கிய மானது, ‘குமிழ் பிரபஞ்சம்’. அண்ட வியலாளர் ஆண்ட்ரே லிண்டே, 1980களில் ஒரு கருத்தை முன்வைத்தார். அதன்படி, பெருவெடிப்புக்குப் பிறகு, இந்தப் பிரபஞ்சம் விரி வடைந்தது.

அந்த விரிவு, சில இடங்களில் முடிவடைந்து, அங்குள்ள ஆற்றல், துகள்களாக மாறி விண்மீன் திரள்களுள் பிரபஞ்சங்கள் தோன்றின. அப்படி உருவான ஒன்றுதான் நாம் வாழும் பிரபஞ்சம்.

ஆனால், சில கோட்பாடு களின்படி, இந்த விரிவாக்கம் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் முடிவடையவில்லை. சில பகுதிகளில், அது தொடர்ந்துகொண்டே இருந்தது. இதை நிலையான விரிவாக்கம் (Eternal Inflation) என்கிறோம்.

அப்படி விரிந்துகொண்டே இருக்கும்போது, அங்கங்கே புதிய பிரபஞ்சங்கள் உருவாக லாம். அப்படி உருவானாலும் அவற்றைச் சுற்றியுள்ள விண்வெளி இடைவிடாமல் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கிறது. கொதிக் கும் தண்ணீரில் குமிழ்கள் தொடர்ந்து தோன்றுவதுபோல, புதிய குமிழ் பிரபஞ்சங்கள் (Bubble Universes) தொடர்ந்து பிறக்கக்கூடும்.

வெவ்வேறு வெற்றிட நிலைகள்

இன்னும் சுவாரசியமான கருத்தை சரக்கோட்பாடு (String Theory) முன்வைக்கிறது. அதன்படி, வெற்றிடம்கூட ஒரே மாதிரி இருக்கவேண்டிய அவசியமில்லை. தோராயமாக, 10^500 வெவ்வேறு வெற்றிட நிலைகள் சாத்தியமாக இருக்கலாம் என்று சில கணித மாதிரிகள் கூறுகின்றன.

ஒவ்வொன்றும் வெவ்வேறு அடிப்படை மாறிலிகளையும், துகள் களின் பண்புகளையும் கொண்ட புதிய பிரபஞ்சத்தை உருவாக்கக்கூடும். நமது பிரபஞ்சம் அந்த எண்ணிலடங்கா சாத்தியங்களில் ஒன்றாக மட்டுமே இருக்கலாம்.

ஆந்த்ரோபிக் கோட்பாடு

இங்குதான் ஒரு கேள்வி எழுகிறது, அத்தனை பிரபஞ்சங்களில், உயிர்கள் வாழக்கூடிய இந்தப் பிரபஞ்சத்தில்தானே மனிதர்கள் இருக்கிறோம்? உயிர்கள் உருவாக்கத்துக்கு ஏற்ற இயற்பியல் விதிகளைக் கொண்ட ஒரு பிரபஞ்சத் தில்தான், “இந்த விதிகள் ஏன் இப்படி இருக்கின்றன?” என்று கேட்கக்கூடிய பார்வையாளர்கள் தோன்ற முடியும். இதைத்தான் ஆந்த்ரோபிக் கோட்பாடு என்கிறார்கள்.

இணைப் பிரபஞ்சங்கள் என்பது இன்றுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை அல்ல. வேறுபிரபஞ்சங்களை நாம் நேரடியாகவும் கண்டறியவில்லை. பல கோட்பாடு களில் இருந்து இயல்பாக உருவாகும் ஒரு சாத்தியமான விளக்கமாகவே அது கருதப்படுகிறது.

(தொடர்ந்து தேடுவோம்)

- sujaaphoenix@gmail.com

SCROLL FOR NEXT