வெற்றிக் கொடி

முடியில் தொடங்கும் ஒழுக்கம் | ஓர் ஆசிரியக் கனவு 5

‘கலகல வகுப்பறை’ சிவா

“இன்றைய இளம் பருவத்தினரின் முடியைப் பாருங்கள். பார்க்கவே சகிக்க வில்லை. ஒழுக்கம் ரொம்பக் கெட்டுப் போச்சு!” என்பது அடிக்கடி கேட்கும் புலம்பல்கள்.

அரசியல்வாதிகள், மூத்த குடிமக்கள், நடுத்தர வயதினர் என அனைவரும் முடியைக் குற்றம் சொல்வதிலிருந்தே ஒழுக்க வலியுறுத்தலைத் தொடங்குகிறார்கள். பெற்றோரும் ஆசிரியரும் செய்வதறியாமல் இருக்கி றோம். குழந்தைகள் தெரியாமல் செய்வதைக் கண்டு பதறிவிடுகிறோம்.

எங்கே தவறுகிறோம்?

வளரிளம் பருவத்தினரை மட்டுமே அதிகம் குறை சொல்லத் தொடங்குகிறோம். வளரிளம் பருவத்தினரின் சில நடத்தை மாற்றங்கள் பெரியவர்களைப் பதற வைக்கின்றன. நமது இளம் பருவத்தில் அதைத்தான் செய்தோம் என்பதும் சேர்ந்துகொள்கிறது.

நாம் செய்த சேட்டைகள், காதல் போன்றவற்றை சக நண்பர்களிடம் பெருமிதமாகப் பகிர்ந்துகொள்கிறோம். நம் குழந்தைகள் செய்யும்போதோ பதறிவிடுகிறோம்.

இன்றைய குழந்தைகள் தாங்கள் செய்வதைப் பற்றி முழுமையாக அறியாமல், ஆர்வத்தால் தவறுகளைச் செய்யலாம். அடுத்த தலைமுறை கெட்டுவிடக் கூடாது என்கிற நமது அக்கறை உண்மை என்றால், குழந்தைகளுடன் உரையாட வேண்டும். புரிதலை ஏற்படுத்த வேண் டும். அதற்கான வழிகளைத் தேடாமல் கோபப்படுகிறோம்.

தன்னை வெளிப்படுத்துதல்

நம்மையும் நம் குழந்தைகளையும் காலத்துக்கு ஏற்ப அலங்கரித்து மகிழ்கிறோம். தீபாவளிக்கு ஆடைகளை வாங்கும்போது ‘லேட்டஸ்ட் டிசைன்' எதுவென்று பார்த்துத் தானே வாங்குகிறோம். தன்னை வெளிப்படுத்துவதை எல்லாரும் விரும்பு கிறோம்.

அதனால் பாராட்டு கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். சிறந்த பெற்றோர், சிறந்த ஆசிரியர் எனப் பாராட்டு கிடைக்கும்போது மகிழ்கிறோம். கூடுதலாக என்ன செய்யலாம் என்று முயல்கிறோம்.

இதெல்லாம் இயல்புதானே. திரைப்படம், விளையாட்டு போன்ற பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் தனக்கெனத் தனித்த பாணியை உருவாக்கிப் பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் அடையாளமாகவும் மாறுகிறது. அதற்கெனச் சிகை, உடையலங்கார நிபுணர்கள் இருக்கிறார்கள். பிரபலங்

களின் பாணிகள் அவர்களின் ரசிகர்களால் பரவலாகின்றன. ஒவ்வொரு காலத்திலும் அந்தந்தக் காலத்தின் பாணி உருவாக்கப்படுகிறது. இன்றைய பாணியைப் பின்பற்றியே ஆகவேண்டிய அழுத்தத்தை விளம்பரங்கள் ஏற்படுத்து கின்றன. அதன் பின்னணியில் கோடிக்கணக்கான ரூபாய் வணிகம் இருக்கிறது.

முதல் மாற்றம் முடியில்

வளரிளம் பருவத்தினரும் தன்னைப் பிறர் கவனிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பிரபலங்கள், சாதனை யாளர்கள் என முன்மாதிரிகளிடம் இருந்து வளரிளம் பருவத்தினர் முதலில் கற்றுக்கொள்வது கூந்தல், உடை பாணிகளைத்தான். பிடித்த கதாநாயகன், நாயகியைப் போலத் தன்னை அலங்கரித்துக் கொள்வது பலருக்கும் விருப்பமான செயல்.

குழந்தைகளின் சிந்தனை, கற்றல், கற்பித்தல் ஆகியவற்றில் ஏராளமான குறைபாடுகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி நேரடியாகக் கண்ணில் படுவது, தோற்றம். தோற்றத்தை வைத்தே ஒருவரை எடை போடுகிறோம்.

அகம், புறம் என எவ்வளவு தத்துவமாகப் பேசினாலும் புறத்தோற்றத்துக்கே அதிக முக்கியத்துவம் தருவோம். பல வேளைகளில் புறத்தோற்றம் அவசியம் என்றாலும், அதன் மூலம் எளிதில் ஏமாற்றவும் முடிகிறது.

குழந்தைகள் பார்த்துப் பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டு களை உருவாக்காமல், அக்கறையின் பெயரால் குறையே சொல்லிக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். சொல்பவரை நோகடிக்க வேண்டும் என்கிற நோக்கில் வேண்டுமென்றே தவறுகளைச் செய்வார்கள்.

நாமும் இளம்பருவத்தில் அதைத்தான் செய்தோம். நம் பேச்சு எடுபடாமல் போவதால், இப்போது புலம்பத் தொடங்குகிறோம். ஒழுக்கம் விழுப்பம் தரும் ஒழுக்கம் என்பது உருவாக்கப்படுவது அல்ல. மனதால் உணர்ந்து மலர்வது.

மனித நடத்தைகளைப் புரிந்துகொண்டு பழகிப் பின்பற்ற எவ்வளவு காலம் ஆகும் என வரையறுத்துவிட முடியாது. கல்வியில் எல்லாமே உடனடியாக மாற வேண்டும். சொன்னதும் மாறிவிடுவார்கள் என ஆசிரியர் முதல் அனைத்துத் தரப்பினரும் நம்புகிறோம்.

அதனால்தான் தவறுகளைக் கண்டதும் நம் ஆசை தீர அறிவுரைகளைச் சொல்லத் தொடங்குகிறோம். குழந்தைகள் காதுகளில் எதையுமே வாங்காமல் தலையாட்டிக்கொண்டு தள்ளி நிற்கிறார்கள்.

ஒழுக்கம் எனும் நாடகம்

சீருடை, வாரிப் படிந்த தலைமுடி, கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு வரிசையாகச் செல்லுதல், சொல்வதை எல்லாம் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற வையே ஒழுக்கம் என்று விதிகளை உருவாக்குகிறோம். அப்படி உருவாக்கப்படுவது நடிப்பாகவே இருக்கும்.

அந்த நாடகம் நாம் சொன்னபடி நடக்கும்வரை மகிழ்ச்சிப் பெருமிதம் அடைகிறோம். சற்றே மாறுதல் தெரிந்தால் பதறிவிடுகிறோம். புலம்பத் தொடங்குகிறோம்.

குழந்தை களுக்கு நீதிகளைச் சொல்ல வேண்டும், தண்டிக்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறோம். பள்ளியிலும் வீட்டிலும் மாற்றங்கள் கடினம் என்பதால் குழந்தைகளிடம் ஒழுக்கம் கெட்டுவிட்டது எனக் குற்றம் சொல்லித் தப்பித்துக்கொள்வது எளிதாக இருக்கிறது.

ராணுவம், காவல்துறையில் அவரவருக்கான சீருடை இருக்கிறது. முடியை எப்படி வெட்டிக்கொள்ள வேண்டும் என்கிற விதிகளும் உண்டு.

பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படையில் இருப்பவர்கள், அதன் விதிகளின்படித் தங்கள் முடியை வெட்டிக்கொள்வார்கள். அதேபோலப் பள்ளிக்கூடத்துக்கு என்று ஒழுக்க விதிமுறைகள் இருக்கின்றன.

அவற்றை மீறி மாணவர் இஷ்டம்போல் இருக்க முடியாது. பள்ளி நடைமுறை விதிமுறைகளை மீறினால் என்ன ஆகும் என்பதில் தெளிவான சட்ட விளக்கங்கள் இல்லை.

இளம் தலைமுறையினரிடம் தன்னைத் தனித்தன்மை யோடு வெளிப்படுத்திக் கொள்ளும் பல்வேறு வாய்ப்பு களை உருவாக்குவது குறித்தே எல்லாரும் பேச வேண்டும்.

(தொடர்ந்து பேசுவோம்)

- தொடர்புக்கு: artsiva13@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT