இன்றைய காலகட்டத்தில், டிஜிட்டல் கற்றலும்; அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் (Stem) ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ஸ்டெம்’ கல்வியும் பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் கற்றுகொள்ள வேண்டியவை ஆகிவிட்டன.
இவை மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்ப்பதோடு சிக்கலைத் தீர்க்கும் திறனையும் வளர்க்கின்றன.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, வானவில் மன்றம், அறிவியல் பூங்கா, கணித மன்றம், மணற்கேணி செயலி போன்ற வளங்களை வழங்கி மேற்கூறிய நவீனக் கல்வியை அனைவருக்கும் எளிதாக மாற்றுகிறது.
டிஜிட்டல் கருவிகள், செயல்பாடுகள் மூலம் பயிலும்போது படிப்பில் கூடுதல் ஆர்வமும் துளிர்க்கிறது. பொழுதுபோக்காக மட்டுமே பயன்பட்ட திறன்பேசி, இன்று கற்றல் வழிகளின் ஆசானாகவும் மாறியுள்ளது.
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் இவை உதவுகின்றன. ஆகையால் மாணவர்களின் முன்னேற்றப் பாதையின் வாகனமே டிஜிட்டல் கற்றலும் ஸ்டெம் கல்வியும்.
- அசியா.M.M, 10 ஆம் வகுப்பு, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குச் சிறார் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதன் மூலம் சினிமா, சமூகம் தொடர்பான உங்கள் சிந்தனையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து 100 சொற்களுக்குள் எழுதி
vetrikodi@hindutamil.co.in மின்னஞ்சலுக்கு உங்கள் பெயர், வகுப்பு, பள்ளி விவரம், திறன்பேசி எண், ஒளிப்படத்துடன் அனுப்புங்கள் மாணவர்களே. சிறந்த கட்டுரைப் பிரசுரிக்கப்படும்.