நியோவிடம் நீலம், சிவப்பில் இரண்டு மாத்திரைகளை நீட்டுகி றான் மார்பியஸ். “நீ சிவப்பு மாத்திரையைச் சாப்பிட்டால், இதுவரை தெரியாத உண்மை ஒன்று உனக்கு புலப்படும். ஆனால் நீல மாத்திரையைச் சாப்பிட்டால், நீ இவ்வளவு நாள் கண்ட உலகத்தைத்தான், திரும்பவும் காண்பாய்!” என்கிறான்.
நியோ, சிவப்பு மாத்திரையை உட்கொள்கிறான். அவன் விழித்தெழும்போது, அங்கே நகரமில்லை, வீடில்லை, அவன் இவ்வளவு நாள் கண்ட உலகம் அங்கில்லை. அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மனிதனும் திரவம் நிரப்பப்பட்ட தனித்தனி குடுவைகளில் (Pods) அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்களது தலை, முதுகுத் தண்டு, உடலின் பல பகுதிகள் வழியாக, ‘மேட்ரிக்ஸ்’ எனும் மாபெரும் கணினி அவர்களது நரம்பு மண்டலத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்கிறது.
கணினி அனுப்பும் மின் நரம்பியல் சமிக்ஞைகள், அவர்களது உலகை அவர்களுடைய மூளைக்குள் உருவாக்குகிறது. ஆனால் அவை அனைத்தும் கணினியால் உருவாக்கப் பட்ட, ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட மெய்நிகர் உலகின் அனுபவங்களே. மனிதர்கள் குடுவைகளுக்குள் அசையாமல் இருந்தாலும், மூளை அந்த மெய்நிகர் உலகையே நிஜம் என்று நம்பி வாழ்கிறது.
1999இல் வெளியான ‘The Matrix’ திரைப்படத்தின் கதை இது. இயற்பியலோ இதைக் கடந்த இன்னும் ஆச்சரியமான கேள்வியை எழுப்புகிறது. ஒரு வேளை, நாம் வாழும், அனுபவிக்கும் முப்பரிமாண பிரபஞ்சமே, குவாண்டம் தகவல்களின் வெளிப்பாடாக இருந்தால்... இதுதான் ஹாலோகிராபிக் கொள்கை (Holographic Principle) முன்வைக்கும் சாத்தியம்.
நாம் வாழும் மூன்றாம் பரிமாண பிரபஞ்சம், இரண்டாம் பரிமாண தகவல்களின் ஹாலோகிராமாக இருக்கலாம் என்கிறது. குவாண்டம் இயற்பியலைப் பொறுத்தவரைப் பிரபஞ்சத்தில் குவாண்டம் தகவல்கள் அழிவதில்லை.
ஆனால், கருந்துளைக்குள் விழும் பொருள்களின் குவாண்டம் தகவல்கள் அழிந்துவிடும், என ‘ஹாகிங் கதிர்வீச்சு’ (Hawking Radiation) கருத்தியலில் ஸ்டீவன் ஹாகிங் சொன்னார். இது குவாண்டம் இயற்பியலின் ‘தகவல் அழியாமை’ கொள்கையுடன் முரண்பட்டது.
நிகழ்வு எல்லையில்..
இந்த முரண்பாட்டுக்கு ஜெரார்ட் டி ஹூஃப்ட், லியோனார்டு சஸ்கிண்ட் ஆகிய இயற்பியலாளர்கள் ஒரு தீர்வை முன்வைத்தனர். கருந்துளைக்குள், பொருள்கள் விழும்போது, அவற்றின் குவாண்டம் தகவல்கள் அழிந்துவிடுவதில்லை. மாறாக, கருந் துளையின் நிகழ்வு எல்லையிலேயே (Event Horizon) அவை படிந்துவிடுகின்றன.
மேலும், கருந்துளைக்குள் விழும் பொருள்களின் எண்ணிக்கை கூடும்போது, அவற்றின் தகவல்கள், நிகழ்வு எல்லையில் அதிகளவு பதியப்பட்டு, அதன் பரப்பளவு, அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பொருள்களின் மூன்றாம் பரிமாணம் கருந்துளைக்கு உள்ளேயும், அவற்றின் இரண்டாம் பரிமாணத் தகவல்கள் மேற் பரப்பிலும் இருப்பதால், கருந்துளையின் உட்பகுதியில் நிகழும் முப்பரிமாண நிகழ்வுகளை, அதன் நிகழ்வு எல்லையில் இருக்கும் தகவல்களால் அறிய முடியும்.
மால்தசேனாவின் நிரூபணம்
ஈர்ப்புவிசை இருக்கும் மூன்றாம் பரிமாண வெளியில் நடக்கும் சிக்கலான கணக்குகளும், ஈர்ப்புவிசையே இல்லாத இரண்டாம் பரிமாண எல்லையில் நடக்கும் குவாண்டம் கணக்குகளும் ஒரே பதிலைத் தருவதை விஞ்ஞானி ஹுவான் மால்தசேனா (Juan Maldacena) 1997இல் கண்டறிந்தார். இதற்கு ‘AdS/CFT Correspondence’ என்று பெயர்.
இதே கருத்தியலைத்தான் இயற்பியலாளர்கள் பிரபஞ்சம் முழுமைக்கும் பொருத்திப் பார்த்தனர். அதுவே ‘ஹாலோகிராபிக் கொள்கை’யின் அடிப்படை. “நம்முடைய மூன்றாம் பரிமாண பிரபஞ்சம், இன்னொரு எல்லையில் பதிவுசெய்யப்பட்ட தகவல்களின் ஹாலோகிராமாக ஏன் இருக்கக் கூடாது?” என்பதே இதன் கருத்து.
அதற்காக ‘ஹாலோகிராம்’ என்று இயற்பிய லாளர்கள் கூறுவதை, ‘மாயை’ என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை, அதுவும் ஒருவகையில் உண்மைதான்.
நீங்கள் கணினியில் கேம் விளையாடும் போது, அதில், உங்களுக்கு முன் இருக்கும் சுவரை ஊடுருவி நீங்கள் செல்ல முடியாது. ஏனென்றால் அங்கே உங்கள் டேட்டாவுக்கு, சுவரின் டேட்டா நிஜம்.
அதேபோல நாம் ஒரு பொருளைத் தொடும்போது, நமக்கு அது மிக நிஜமாகத் தெரிகிறது. ஆனால், குவாண்டம் மட்டத்தில் போய் பார்த்தால், அங்கே பொருள்கள் எதுவுமில்லை. அவற்றை விவரிக்கும் குவாண்டம் தகவல்களே அங்கு அடிப்படை.
எதிர்காலத்தில் அடுத்த தலைமுறை இணையமான 6ஜி வந்தபிறகு, ‘உணர்வுகளின் இணையம்’ (Internet of Senses) மிக வேகமாக வளர்ந்துவிடலாம். யாருக்கு தெரியும்? வீட்டின் ஈசிசேரில் உட்கார்ந்தபடியே, மெரினா கடற்கரையில் காற்று வாங்கியபடி கடலை சாப்பிடும் உணர்வை உருவாக்கிக்கொள்ளவும் முடியலாம்.
(தொடர்ந்து தேடுவோம்)
- கட்டுரையாளர்: மென்பொறியியல் தொழில் முனைவோர், அறிவியல் எழுத்தாளர்; sujaaphoenix@gmail.com