வெற்றிக் கொடி

குழந்தைகளுக்கும் சுயமரியாதை உண்டு! | என் மன வானில்

தே. இளவரசி

சூழலே தேவைகளின் அடிப்படை. தேவைகளே நல்ல நிகழ்வுகளை உருவாக்கும். மாணவர்களுக்கான தேவை களே ஆசிரியர் களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன என்பதை 27 ஆண்டுக் கால ஆசிரியர்ப் பணி அனுபவத்தில் உணர்கிறேன்.

பூட்டுக்குப் பெயர் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் நன்செய், புன்செய், மானாவாரி சாகுபடி என விவசாய குடும்பத்தில் பிறந்து மண்-மழை வெயிலோடு விளையாடிய நான் ஆசிரியரானது பேரின்பம். அங்கே தொடங்கிய அறிவியல் ஆசிரியர் பணி, விவசாயம் குறித்த கற்றல், கற்பித்தலோடு இன்றும் தொடர்கிறது.

‘போர்ட் நோவோ' என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட பரங்கிப்பேட்டைக் குப் பணியேற்க வந்தபோது நண்பரும் தமிழக இயற்கை விவசாயிகள் அமைப் பின் செயலாளருமான அரச்சலூர் செல்வம், “அங்கு கடல் விவசாயத்தைக் கொண்டு சேருங்கள்" என ஒரு சிறு விளக்கை ஏற்றி வைத்து அனுப்பினார்.

அது சுடர் விட்டுப் பிரகாசமானது. பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகள் கடல் உணவுத் திருவிழாவை எனது வழிகாட்டலில் சிறப்பாக நடத்தியது இன்றுவரை எனக்குப் பெருமை அளிக்கிறது. அதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023ஆம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்ததை முன்னிட்டு, சிறு தானிய உணவுத் திருவிழாவை நடத்தினோம்.

இவை தவிர ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16ஐ உலக உணவு நாளாக ஐக்கிய நாடுகளின் உணவு, வேளாண்மை அமைப்பு (FAO) அறிவித்தது. இதுகுறித்து மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவசி யம் என்பதால், இது சார்ந்த நிகழ்வுகளைப் பள்ளியில் நடத்தி வருகி றோம்.

கோபம் கொள்ளாதீர்!

இதனிடையில், பணியிட மாற்றம் காரணமாக ஈரோடு மாவட்டப் பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழல் அண்மையில் உருவானது.

அப்போது என்னை மதிப்பீடு செய்வ தற்கு, அதுவரை என்னிடம் படித்த மாணவி களிடம் எனது கற்பித்தல் பணியைப் பற்றிய கருத்துகளை எழுதித் தரும்படி கேட்டேன். மாணவிகள் தமது பெயரை அதில் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் கூறியிருந்தேன்.

மாணவிகளின் மதிப்பீட்டில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றேன். இருப்பினும், கோபப்படுவதைத் தவிர்க்கும் படி அன்புடன் கேட்டிருந்தார்கள். ஆசிரியர் - மாணவர் தொடக்கக் கட்டத்தில் அடிப் படைப் புரிதலின்றி கோபம் கொள்வது இயல்பு. அதே மாணவிகள் நம்மிடம் தொடர்ந்து பயில் கையில் கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை எனக்கு உணர்த்தினர்.

ஆசிரியர்களின் கோபம் சூழலைச் சார்ந்திருந்தாலும், மாணவர்களின் மனத்தில் அது ரணத்தை ஏற்படுத்தக்கூடும். “ஒரு மனிதனின் நல்ல பண்பை வெளிக் கொணர்வது குழந்தைகளே. குழந்தைகளின் முன்னால் நல்ல பண்பை மட்டுமே வெளிப் படுத்த அவர்கள் தூண்டுவார்கள்", என்றார் குழந்தைக் கல்வியாளர் மரியா மாண்டிசோரி.

ஆழ்மனத் தூண்டல் மரபாகக் கடத்தப்படுகிறது என்கிறது அறிவியல். நேர்மறை யான தூண்டல் மாணவப் பருவத்தில் நிகழப் பள்ளிகள் முக்கியக் காரணமாக அமைகின்றன. குழந்தைகளுக்கும் சுய மரியாதை உண்டு என்பதைப் பெரும்பாலான பெற்றோர்களும் ஆசிரியர்களும் நினைவில் கொள்ளாமலேயே கடந்து செல்வதைப் பார்க்க முடிகிறது.

அதிலும் மேல்நிலை வகுப்பு மாணவர்களைச் சின்ன சின்ன புறக்கணிப்புகளும்கூட காயப்படுத்தி, அவர்களைக் கடுமையாக நடந்துகொள்ள வழிவகுத்து விடுகின்றன. அவர்களை அலட்சியப்படுத்திப் பேசுவது தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.

கருத்துக்கு மதிப்பளித்தல்

குழந்தைகள் சார்ந்து பெரியவர்களுக்கு ‘அறம் சார்ந்த அணுகுமுறை’ (Ethical Approach) இல்லாத இடத்தில் சரியான நடத்தையை, அவர்கள் எப்படி வெளிக் காட்டுவார்கள்? இன்றைய தலைமுறையே இப்படித்தான் என ஒட்டுமொத்தமாக விமர்சிப்பது முறையல்ல. இதில் பெரிய வர்களின் பங்கு என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் கடந்துவிடக் கூடாது.

மாணவர்களின் கருத்துகளைக் கேட்கும் ஆசிரியர்களை அவர்கள் வியப்போடு பார்க்கிறார்கள். யதார்த்த நிலையில் இந்த நடைமுறை இல்லை என்பதையே இது உணர்த்து கிறது. ‘மாணவர் மனசு’ என்கிற பெட்டியைப் பள்ளிகள்தோறும் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

அவர்கள் அதைச்சரியாக, முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது ஆவல். மாணவர் மனதை அறிய ஆய்வுகளை நடத்துவதும், ஓர் அறிவியல் அணுகு முறைதான்.

பாடம் சார்ந்த மதிப்பீடுகளும் பின்னூட்டங்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படு கின்றனவோ அதே அளவுக்கு நல்லுறவு சார்ந்தும் கருத்துக் கேட்பு தேவை என அனு பவம் உணர்த்துகிறது. உறவுகள் வலுப்பெற உரையாடுவோம்.

- கட்டுரையாளர்: முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,இலக்காபுரம், ஈரோடு; elavarasi.nachiyar@gmail.com

SCROLL FOR NEXT