வாயுள்ள பிள்ளை மட்டுமல்ல, சைகை மொழி பேசும் பிள்ளையும் வழக்கில் வெல்லும் என நிரூபித்தவர் செவித்திறன் குறைபாடுடைய வழக்கறிஞர் சாரா சன்னி. உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழியில் முதன்முதலில் சாரா வாதாட, சைகை மொழிபெயர்ப்பாளர் சாராவின் வாதத்தை மொழிபெயர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சி 2023 செப்டம்பரில் நிகழ்ந்தது.
அன்று சைகை மொழி தொடர்புமொழியாக மட்டுமல்லாமல் காதுகேளாதோரின் வாழ்வில் புது விடியலையும் கொண்டுவந்தது. ஒரு சராசரி நபரால் 0-25 டெசிபல் ஒலிகளைக் கேட்க இயலும். அதற்கு மேல் ஒலியைக் கேட்க இயலாமல் போகும்போது மென்மையான காது கேளாமையில் (26-40 டெசிபல்) தொடங்கி முழுமை யான கேட்டல் திறன் இழப்பு (91 டெசிபல்) வரை ஏற்படக்கூடும்.
காது கேளாதோரின் தந்தை
காது கேளாதோரின் அனுபவங்களைப் பிரதிபலிக்க கை அசைவுகள், விரல் அமைப்புகள், முகபாவனைகள், உடல் நிலைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாவது சைகை மொழி. தனித்துவமான இலக்கணம், சொற்கள், வாக்கிய அமைப்பு (Syntax) ஆகியவை கொண்ட ஒரு முழுமையான மொழி அமைப்பு இது.
பேசும் மொழிக்கு ஏற்ப இலக்கண அமைப்பும் மாறுபடும், ஒவ்வொரு நாட்டின் சைகை மொழியும் தனித்துவமானது. ஆதிகாலத்தில், கைகளின் அசைவுகள், முகபாவனைகள் மூலம் தொடர்புகொள்வது மனிதர்களின் இயல்பான தொடர்பு முறையாக இருந்தது.
பொ.ஆ.மு. (கி.மு.) 5ஆம் நூற்றாண்டி லேயே சாக்ரடீஸ், கை சைகைகள் மூலம் காது கேளாதோர் தொடர்புகொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயினில் மதகுருக்கள், மௌன விரதத்தின்போது பயன்படுத்தப்பட்ட கைச்சைகை களை மாற்றி அமைத்து, காது கேளாத மாணவர் களுக்குக் கற்பிக்கத் தொடங்கினர்.
பின்னர், ஜுவான் பாப்லோ போனெட் 1620இல், உலகின் முதல் கை விரல் எழுத்துமுறை (manual alphabet system) குறித்த நூலை வெளியிட்டார். பிரான்சில், ‘காது கேளாதோரின் தந்தை’ என்ற ழைக்கப்பட்ட அப்பே சார்ல்ஸ்-மிஷேல் த லெப், காது கேளாதோருக்கான முதல் இலவச பொதுப் பள்ளியை நிறுவினார்.
சைகைகளைத் தொகுத்து அகராதி உருவாக்கி, இயல்பான சைகைகளுடன் இணைத்து அவர் கற்பித்தார். 1981இல் இந்திய சைகை மொழி அகராதி முதன்முதலில் வெளிவந்தது. பின்னர், 2011இல் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி - பயிற்சி மையம் நிறுவப்பட்டது.
கட்டாயமாக்கும் சட்டம்
காது கேளாதோரின் வாழ்க்கையில் கல்வி, வேலை, சமூக உரிமை, சுயநிறைவு ஆகியவற்றை உருவாக் கும் அடிப்படையாகச் சைகை மொழி உள்ளது. சைகை மொழி மூலம் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களைக் கற்பிக்கும்போது, கருத்து அடிப்படை யிலான புரிதல் மாணவர்களுக்கு மேம்படுகிறது.
காது கேளாதோருக்கு அரசுத் தகவல்கள், அறிவிப்புகள், சேவைகள் அனைத்தும் சைகை மொழியில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறது சட்டம்.
பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் என எல்லா இடங்களிலும் சைகை மொழி ஆதரவு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அரசு, சில தனியார் ஊடகங்களும் சைகை மொழி விளக்கத்துடன் செய்திகளை ஒளிபரப்புகின்றன.
சவால்களும் வழிகளும்
திறமையான சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை இன்றுவரை இருப்பதால் மருத்துவம், நீதித்துறை, அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய துறைகளில் அணுகல் சிரமமாக உள்ளது. அரசு சேவைகளில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் இருந்தாலும், அவை முழுமையாக நடைமுறைக்கு வராததும் ஒரு பெரிய குறையாக உள்ளது.
இத்தகைய சவால்களை சமாளிக்க, பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன. பள்ளிகளில் சைகை மொழியை ஒரு பாடமாக
அறிமுகப்படுத்துவது, காது கேளாத மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக் கும் உள்ளடக்கிய கல்வியை உருவாக்கும்.
ஆசிரியர்களுக்கு சைகை மொழிப் பயிற்சி வழங்கப்பட வேண்டும், ஊடகங்களில் சைகை மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும்.
மேலும், அரசு சேவை களில் சைகை மொழி வசதிகளைக் கட்டாயமாக்கி, அனைத்து துறைகளிலும் அணுகல் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதனுடன், மக்களுக் கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டால், சைகை மொழி ஒரு பரவலான சமூக இயக்கமாக வளர முடியும்.
- கட்டுரையாளர் முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com