“அம்மா… நான் ஓட ணும்…” மூன்று வயது ஆதவின் கண்களில் பொங்கி வழிந்த ஆசை, அவன் கால்களில் மட்டும் சற்று இறுக்கமாக இருந்தது. மற்ற குழந்தைகள் சிரித்தபடியே ஓடும்போது அவன் கண்கள் அவர்களைத் தொடர்ந்து சென்றன. அவன் சிரிப்பும் அவர்களைப் போலவே இருந்தது. அவன் கேள்விகளும் வயதுக்கு ஏற்றவையாகவே இருந்தன. வண்ணங் களை அடையாளம் கண்டான். பாடல்களை நினைவில் வைத்திருந்தான்.
கதைகளைக் கேட்டால், மறுபடியும் சொல்லிக் காட்டினான். ஓட வேண்டும் என்ற ஆசைக்கு மட்டும் அவன் கால்கள் உடனே இணங்கவில்லை. ஆதவின் அம்மா முதலில் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. “பரவாயில்லை… ஒவ்வொரு குழந்தையும் வேறுபட்ட வேகத்தில் வளருமே!” எனத் தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டார்.
ஆதவின் வளர்ச்சியில் சில சிறிய சிக்கல்கள் இருந்தன. ஆறு மாதம் ஆனபோதும் அவன் தலையை நிமிர்த்தச் சிரமப்பட்டான், ஒன்பது மாதம் ஆனபோதும் சரியாக உட்கார முடியவில்லை, ஒரு வயது ஆனபோதும் தவழத் தொடங்கவில்லை. இரண்டு வயதிலும் நிற்பது, நடப்பது சாத்தியமாகவில்லை.
அவன் கால்களில் தசைகள் மிகவும் இறுக்கமாக இருந்தன. அம்மாவின் மனதில் ஒரு கேள்வி மெதுவாக எழுந்தது: “இது சாதாரண வளர்ச்சித் தாமதமா? இல்லை வேறு ஏதாவது காரணமா?”. மருத்துவரை அணுகியபோதுதான் முதன்முறையாக அந்த வார்த்தையைக் கேள்விப்பட்டார். ஆதவுக்கு இருக்கும் பிரச் சினை ‘செரிப்ரல் பால்ஸி’ (Cerebral Palsy-CP).
இயக்கக் குறைபாடு
குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் சேதம் அல்லது மாற்றத்தால் உருவாகும் இயக்கக் குறைபாடுதான் செரிப்ரல் பால்ஸி. இது பரவக்கூடிய தொற்றுநோய் அல்ல. இது காலப்போக்கில் மோசமடைவதும் இல்லை.
ஆனால் உடல் இயக்கம், தசைக் கட்டுப்பாடு, சமநிலை, பேச்சு போன்றவற்றில் சவால்களை ஏற்படுத்தலாம். கர்ப்பக்காலத்தில், பிரசவத்தின்போது அல்லது பிறந்த சில மாதங்களில் மூளையில் ஏற்படும் ஆக்ஸிஜன் குறைபாடு, தொற்று, குறைந்த எடைப் பிறப்பு போன்ற காரணிகள் இதற்கு வழிவகுக்கலாம்.
மூளையே உடலுக்கு ‘இயக்க உத்தரவு’ அளிக்கும் கட்டுப்பாட்டு மையம். கால்களுக்கு ‘ஓடு’ என்று மூளை உத்தரவிட்டாலும், அந்தச் செய்தி தசைகளுக்குச் சரியாகச் செல்லாமல் இருந்தால் என்ன ஆகும்? அதுவே ஆதவின் கால்களில் நிகழ்ந்தது.
எப்படி வந்தாயோ?
ஆதவின் அம்மா கர்ப்பமாக இருந்த காலத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. ஏழாவது மாதத்தில் திடீர் மிகை ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். எட்டாவது மாதத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஆதவ். பிறக்கும்போது சற்று ஆக்சிஜன் குறைவு காரணமாக அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இந்தக் காரணிகளில் ஏதாவது ஒன்று அல்லது எல்லாம் இணைந்து குழந்தையின் மூளையின் இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதியைப் பாதித்திருக்கலாம். அவன் புத்திசாலித்தனமாக எல்லாவற்றையும் புரிந்துகொண்டாலும், அதனால்தான் அவன் கால்கள் மட்டும் அவன் விருப்பத்துக்கு உடனடியாக இணங்கவில்லை.
கர்ப்ப காலத் தொற்றுகள், தாயின் நீரிழிவு நோய், குழந்தை பிறக்கும்போது ஏற்படும் நீண்ட பிரசவம் நேரம், அவசர சிசேரியன், மூளை ரத்தக் கசிவு, குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் கடுமையான மஞ்சள் காமாலை, மூளைத் தொற்றுகள் (Meningitis), தலைக்கு ஏற்பட்ட கடுமையான காயம் போன்ற பல காரணங்களால் செரிப்ரல் பால்ஸி ஏற்படலாம்.
அறிவுத்திறன் குறைபாடா?
“மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் ஆதவுக்கு அறிவுத்திறன் குறைபாடு இருக்குமா டாக்டர்?” - இது ஆதவ் அம்மாவின் பெரிய கவலை. மருத்துவரின் பதில் அவருக்கு நிம்மதி அளித்தது. “உங்கள் மகனுக்கு Spastic Cerebral Palsy உள்ளது. அதனால் அவன் தசைகள் இறுக்கமாக இருக்கின்றன. அவன் அறிவுத்திறன் பாதிக்கப்படவில்லை, எல்லா செரிப்ரல் பால்ஸி குழந்தைகளுக்கும் அறிவுத்திறன் குறைபாடு இருக்காது. சிலருக்கு மட்டுமே இருக்கும். உங்கள் மகனின் புரிதல், கவனம், மொழித்திறன் அனைத்தும் வயதுக்கு ஏற்றவையாக இருக்கின்றன.”
காத்திருக்கலாமா?
ஒரு குழந்தையின் வளர்ச்சி தாமதமானால், குடும்பத்தினர் முதலில் சொல்வது, “வீட்டில் யாருடனாவது ஒப்பிட்டு அவரும் தாமத மாகத்தான் நடந்தாராம்… பரவாயில்லை!”. சில நேரம் அந்த “பரவாயில்லை” என்பதில்தான் பிரச்சினை மறைந்து கிடக்கும். எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோம, எவ்வளவு வேக மாகச் சிகிச்சை அல்லது பயிற்சியைத் தொடங்குகிறோமோ அவ்வளவு விரைவாக வளர்ச்சிக் குறைபாட்டை குணமாக்க இயலும்.
எத்தனை வகை?
செரிப்ரல் பால்ஸி ஒரே மாதிரியான நிலை அல்ல; குழந்தையின் மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தே அதன் அறிகுறிகள் மாறுபடும். சில குழந்தைகளுக்கு Spastic cp காணப்படும். இதில் தசைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும்; குழந்தை கை, கால் இயக்கங்கள் சிரமத்துடன் இருக்கும், நடக்கும்போது கால்கள் ஒன்றோடொன்று உரசுவது போன்ற தோற்றம் இருக்கும்.
சிலர் Dyskinetic CP உடன் காணப்படுவர். இதில் கட்டுப்பாடற்ற, திடீர், சுழலும் அல்லது வளைந்து கொண்டிருக்கும் இயக்கங்கள் காணப்படும்; குழந்தை அமைதியாக உட்காரவே சிரமப்படலாம்.
சில குழந்தைகளுக்கு Ataxic CP எனும் சமநிலை, ஒத்துழைப்பு குறைபாடுகள் இருக்கலாம்; இந்தக் குழந்தைகள் நடக்கும்போது தடுமாறலாம், சிறிய பொருள்களைப் பிடிப்பதில் சிரமம் இருக்கும். சில குழந்தைகளுக்கு மேலே சொன்ன இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகைகளின் அறிகுறிகள் சேர்ந்து Mixed cp காணப்படலாம். ஆகவே, செரிப்ரல் பால்ஸி ஒவ்வொரு குழந்தை யிடமும் வேறுபட்ட முறையில் வெளிப்படும் என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம்.
விழிப்புணர்வு மாதம்
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் உலகம் முழுவதும் செரிப்ரல் பால்ஸி விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் நாம் செய்யக்கூடிய சிறிய செயல்கள் கூட பெரிய மாற்றத்தை உருவாக்கலாம்.
வளர்ச்சித் தாமதங்களைக் கவனிக்கச் சொல் லுங்கள், செரிப்ரல் பால்ஸி பற்றிய தவறான நம்பிக்கைகளை உடையுங்கள், ஆரம்ப தலையீட்டின் முக்கியத்துவத்தைப் பகிருங்கள். சரியான நேரத்தில் கண்டறிந்தால், சரியான சிகிச்சையும் பயிற்சியும் கிடைத்தால், ஒரு செரிப்ரல் பால்ஸி குழந்தையின் வாழ்க்கைப் பாதை முற்றிலும் மாறக்கூடும்.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், பார்வைக் குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் சென்னை மண்டல மையத்தின் உதவி பேராசிரியர்; revbest15@gmail.com