காலநிலை மாற்றம் சார்ந்த விழிப்புணர்வு, போராட்டங் களுக்காக கரோனா பெருந் தொற்று பரவுவதற்கு முன் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் அன்றைக்குச் சிறுமியாக இருந்த கிரெட்டா துன்பர்க்.
ஸ்வீடனில் 15 வயதில் அவர் தொடங்கிய போராட்டம், உலகெங்கும் குழந்தைகள், பெரியவர்களிடையேப் பரவியது. நோபல் அமைதிப் பரிசுக்கும் கிரெட்டா பரிசீலிக்கப்பட்டார். அதே நேரம் ‘ஆஸ்பெர்கர்ஸ் நோய்க்கூறு’ எனும் ஒரு வகை ஆட்டிச நிலை அவருக்கு இருந்தது.
அடிப்படை புரிதல்: ஆட்டிசம் எனும் சொல் இன்று பேசப்படுகிறது. இருப்பினும் பலர் அதை ஒரு குறைபாடாக மட்டுமே கருதுகின்றனர். உண்மையில் அது ஒருவித நரம்பியல் பன்முகத்தன்மை (Neuro Diversity).
‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’ (ASD) என்பது குழந்தையின் ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்தில் காணப்படும் நரம்பி யல் நிலை. ‘ஸ்பெக்ட்ரம்’ என்கிற சொல்லே அதன் வீச்சை வெளிப் படுத்துகிறது. ஆட்டிசம் உடைய ஒவ்வொருவரும் வெவ்வேறு அளவில் அறிகுறிகளை வெளிப் படுத்துவர்.
சிறப்புத் திறன்கள்: சமூக தொடர்பில் தடுமாற்றம், ஒத்து இயங்குவதில் சிரமம், மொழி வளர்ச்சியில் தாமதம் அல்லது தனித்துவமான பேச்சு முறை, ஒரே செயல்பாட்டில் அதிக கவனம், ஒலி, ஒளி, தொடுதல் போன்ற உணர்வுகளில் அதிக அல்லது குறைந்த உணர்திறன் போன்றவை ஆட்டிசம் உள்ளவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பொதுவான சவால்கள்.
அதுவே, ஆட்டிசம் உடைய சில குழந்தைகள் குறிப்பிட்டத் துறைகளில் அசாதாரணத் திறன்களை வெளிப்படுத்துவார்கள். ஆட்டிசம் கொண்டவர்களில் ஒரு சிறிய சதவீத நபர்களிடம் ‘சாவன்ட் சிண்ட்ரோம்’ (Savant Syndrome) எனப்படும் சிறப்புத் திறன்கள் காணப்படுகின்றன. இவர்கள் குறிப்பிட்ட துறை களில் அசாதாரணத் திறனை வெளிப்படுத்துவார்கள்.
சிலர் ஒருமுறை பார்த்தக் காட்சியை மிகத் துல்லியமாக நினைவில் வைத்துக்கொண்டு, அதன் ஒவ்வொரு விவரத்தையும் வரைவார்கள். கட்டடங்கள், நகர அமைப்புகள், இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை மிக நுணுக்கமாகச் சித்தரிப்பது இவர்களின் சிறப்பம்சம்.
ஒருமுறை கேட்ட இசையைச் சரியாக ஸ்ருதி, தாளத்தில் வாசிக்கும் திறன் சிலரிடம் காணப்படும். இசை, இவர்களுக்கு ஒரு தொடர்பு மொழியாக மாறுகிறது. பல ஆண்டுகளின் காலண்டர் தேதிகளைத் துல்லியமாகச் சொல்லுதல், பெரிய எண்களை மனக்கணக்கில் கணக்கிடுதல், கணித முறைமைகளை விரைந்துக் கண்டறி தல் போன்ற திறன்கள் சிலரிடம் வெளிப்படலாம்.
நிரலாக்கம், வடிவமைப்பு, கணினி அனிமேஷன், ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் சிலர் ஆழ்ந்தக் கவனம் செலுத்துவார்கள். ஒரே பிரச்சி னையைப் பலமுறை ஆராய்ந்துத் தீர்வு காணும் மனப்பான்மை இவர்களுக்கு இருக்கும்.
அறிவியல் பின்னணி - ‘சாவன்ட்’ (Savant) திறன் என்பது மந்திரமோ அதி சயமோ அல்ல. அது மூளைத் தகவலை வேறுபட்ட முறையில் செயலாக்குவதன் விளைவு. சிறிய விவரங்களைக்கூட மிகத் தெளிவாகக் கவனிக்கும் திறன். பலர் ஒரு காட்சியை முழுமையாகப் பார்ப்பார்கள்; ஆனால், சிலர் அந்தக் காட்சியின் ஒவ்வொரு சிறு விவரத்தையும் கவனிப்பார்கள்.
ஆட்டிசம் கொண்ட நபர்கள் பல நேரம் இந்தச் சிந்தனை முறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இசையின் நுணுக்கங்கள், கலை வடிவங்களின் துல்லியம் போன்ற வற்றில் இவர்களுக்கு உள்ள விவர அறிவு பல கலைத் துறைகளில் பெரிய வலிமையாக மாறுகிறது.
அதீத கவனம்: ஆட்டிசம் உடையவர்களால் ஒரே விஷயத்தில் நீண்ட நேரத்துக்கு அதீத கவனத்தைக் குவிக்க (Hyper Focus) முடியும். நூற்றுக்கணக்கான கார்களின் வகைகள் பற்றியத் தகவல்களை நினைவில் வைத்திருப்பது, நிரலாக்கத்தில் பல மணி நேரம் மூழ்கிப் பணியாற்றுவது, ஓவியத்தின் ஒவ்வொரு கோட்டையும் மிகத் துல்லியமாக வரைவது, இவை அனைத்தும் ஆழ்ந்தக் கவனத்தின் வெளிப்பாடுகள்.
சாதாரணமாக கவனச்சிதறல் ஏற்படும் உலகில், நேர்த்தியான, நீடித்த கவனம் செலுத்துவதே ஒருவித ‘சூப்பர் பவர்’ அல்லவா? அதேநேரம், ஆட்டிசம் கொண்ட அனைவரும் ‘சாவன்ட்’ திறன் கொண்ட வர்களாக இருக்க மாட்டார்கள். சிலர் உயர்ந்த அறிவாற்றல், குறிப்பிட்ட துறைகளில் அபாரத் திறன் கொண்டவர்களாக இருக் கலாம்.
இருப்பினும் அன்றாட அவசியங்களான சாப்பிடுதல், உடை அணிதல், சுய பராமரிப்பு முதலானவற்றுக்கு அவர்களுக்கு ஆதரவு தேவைப்படலாம் அல்லது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் இருக்கலாம்.
திறமையை மட்டும் முன்னிறுத்தி, அவர்களின் சமூக, உணர்ச்சித் தேவைகளைப் புறக்கணிக்கக் கூடாது. சிறப்புத் திறன்களைக் கண்டறிவதும் கவனம் செலுத்துவதும் சவால்களை மறுப்ப தற்காக அல்ல; அந்த சவால்களுக்குள் மறைந்திருக்கும் வலிமையை அடையாளம் காண்பதற்கே.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், பார்வைக் குறைபாடுடைய நபர்களின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் சென்னை மண்டல மையத்தின் உதவி பேராசிரியர்; revbest15@gmail.com