வெற்றிக் கொடி

கலங்க வைக்கும் போர்!

Guest Author

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் தாக்கத் தைப் பள்ளியிலோ, வீட்டிலோ ஏதேனும் ஒரு வகையில் மாணவர்கள் உணர்கிறீர்களா என ‘போர்க் காலத்தில் சத்துணவு’ தலைப்பின் கீழ் கடந்த வாரம் கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு மாணவர்கள் பலரும் கட்டுரைகள் அனுப்பி இருந்தனர். அவர்களின் எழுத்தில் சமூக அக்கறையும், புரிதலும் வெளிப்பட்டது. சிறந்த பதிவுகளை எழுதிய அத்தனை மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

பீதி முன்பதிவு வேண்டாம்

போர் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவில் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு உள்ளது. வணிகத் தேவைக்காக உணவகங்கள், தொழிற்சாலைகளுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகம் செய்யப் படுவதைக் காட்டிலும் வீட்டுப் பயன் பாட்டுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் வதந்தியால் மக்கள் அதிகப்படியான ‘பீதி முன்பதிவு’ (panic booking) செய்கின்றனர். இது தட்டுப்பாட்டை அதிகப்படுத்துகிறது. வதந்திகளை நம்ப வேண்டாம், என்றும் அதிகாரப்பூர்வ தகவல் மூலம் முன்பதிவு செய்யுமாறும் அரசு வலியுறுத்தி உள்ளது.

          

தமிழ்நாட்டில் சமையல் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் அடுத்த இருபது நாட்களுக்குத் தேவையான சிலிண்டர்கள் இருப்பு உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பள்ளிகள், அங்கன்

வாடிகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எல்பிஜி சிலிண்டர் முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு, மதிய உணவு விநியோகம் இதுவரை சீராக நடைபெற்றுவருகிறது.

- ப.கீர்த்திமாலினி, 11ஆம் வகுப்பு, ஆ.ம.மே.நி.பள்ளி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை.

அதிகாரப் போட்டி

போர் பற்றிய செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது மிகவும் பயமாக உள்ளது. எதற்காக இப்படி ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்த வேண்டும்? அதிகாரப் போட்டி சாதாரண அப்பாவி மக்களின் உயிர்களைப் பலியாக்குகிறது

இதனால் தற்போது பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆனால், எங்கள் பள்ளியில் காலை சிற்றுண்டி, மதிய சத்துணவு எந்த விதமான தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், எங்கள் கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விலையேற்றத்தால் மிகுந்த கவலையோடு உள்ளனர்.

- மு. ஹரிஷ், 8ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சின்னப்பள்ளத்தூர், பென்னாகரம், தர்மபுரி.

அழிவு அறிவியல் எதற்கு

அறிவியல் வளர்ச்சி மனிதக் குல முன் னேற்றத் துக்கு எவ்விதம் உதவுகிறது என்பதை அன்றாட வாழ் வில் உணர்கிறோம். அதே வேளையில் அதற்கு நேரெதிராக அறிவியல் ஆயுதங்கள் மனிதக் குல அழிவுக்கும் உதவுவதை இப்போர்ச் சூழல் உணர்த்துகிறது.

நமது உடலின் ஏதோவொரு பாகத்தில் ஏற்படும் உபாதை உடலின் மற்ற பகுதி களாலும் உணரப்படுவதுபோல, உலகின் ஏதோவொரு மூலையில் நடை பெறும் போர் இங்குச் சிறு உணவகம் நடத்தும் ஒருவரை எவ்விதம் பாதிக்கிறது என்பதைக் கடந்த பத்து நாள்களாக நேரடியாகக் காண்கிறோம்.

ப.கீர்த்திமாலினி, மு. ஹரிஷ், கே.எஸ்.கவின், பா.மித்ரன்

சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்படாது என மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ அறிவுறுத்தியும், தேவைக்கு அதிகமாக வாங்கி சேமிப்போரின் கீழ்மை எண்ணங்களையும் இப்போர்ச் சூழல் வெளிக்கொண்டு வந்துள்ளது.

பள்ளிகளில் வழங்கப்படும் காலை, மதிய உணவு இதுவரை எவ்வித தொய்வுமின்றி வழங்கப்பட்டுவருவது ஆறுதல் அளிக்கிறது.

பள்ளி மீது ஏவுகணை செலுத்தி நூற்றுக் கணக்கான மாணவிகளைக் கொன்றதன் மூலம் தொடங்கப்பட்ட இப்போரை உலகம் முழுக்க இருக்கும் மாணவ சமுதாயம் ஒருவித மிரட்சியுடனே பார்க்கிறது.

- கே.எஸ்.கவின், 11ஆம் வகுப்பு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மணலூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி.

போர் எப்போது முடியும்?

பள்ளியில் வழக்கம்போல் சத்துணவு விநியோகிக்கப்படுவதால் போரின் தாக்கத்தை நான் நேரடியாக உணரவில்லை. ஆனால், எங்கள் வீட்டில் போரின் பாதிப்பை உணர்கிறேன். என் அப்பா 11 வருடங்களாக ஐக்கிய அமீரகத்தில் பணி செய்து வருகிறார்.

நான் பிறந்ததிலிருந்தே ஆண்டுக்கு ஒரு மாதம் வந்து செல்வார். இப்போது போர்ச்சூழல் காரணமாக அவருக்கு சம்பளப் பிரச்சினை. இதனால், வழக்கமாக நான் என்ன கேட்டாலும் வாங்கித்தரும் அம்மா, இப்போது பணம் இல்லை என்கிறார்.

நான் மாநகராட்சி அரசுப் பள்ளியில் படித்து வருவதால் பள்ளிக் கட்டணம் செலுத்துவதில்லை. இருந்தாலும் மளிகை, சாப்பாடு போன்றவற்றில் எங்களுக்குப் பிரச்சினை.

மட்டுமில்லாமல் போர் காரணமாக வீட்டில் சண்டை, முரண்பாடுகள் அதிகரிப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். போர் முடிந்தால் இது எல்லாமே முடிந்துவிடும். போரின் காரணமாக நானும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளேன்.

- பா. மித்ரன், இராமநாதன் செட்டியார் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, காரைக்குடி.

SCROLL FOR NEXT