புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்தள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தோபா கல்லூரியில் 65-ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசியதாவது:
நமது நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தைக் கருத்தில் கொண்டும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையிலும் நாட்டின் எதிர்காலத்தைக் கருதியும் தொலைநோக்குப் பார்வையுடன் தேசிய புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும்.
புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக 34 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டு, கல்வி மற்றும் திறன் வளர்ச்சியிலும், பிராந்திய மொழி கல்வியிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, உடல் வலிமை பெறவும் விளையாட்டுத் துறைகளில் மாணவர் கள் முன்னேறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கைகல்வி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு மைல்கல் என்பதை வருங்காலம் நிரூபிக்கும். எனவே, மாணவர்களின் நலனையும் அவர்களது ஒளிமயமான பாதைக்கும் அதன் மூலம் நாட்டின் வளமான எதிர்காலத்துக்கும் உதவும் வகையில் புதிய கல்விக் கொள்கையை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆதரிக்க வேண்டும்.
திறன் இந்தியா திட்டத்தின் கீழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதோடு, மென்திறன்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதன் மூலம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிறந்த தொழில்வளத்தை இளைஞர்கள் பெறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.