பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லப் பயன்படும் வருமானம், இருப்பிடம், சாதி உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெற வருவாய்த் துறையினரிடம் விண்ணப்பித்தும் அவை கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, அதில் இணைக்கப்படவேண்டிய வருமானம், சாதி, இருப்பிட மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களுக்கு அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது பொது முடக்கக் காலம் என்பதால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சேவை மற்றும் அரசின் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அவ்வாறு விண்ணப்பித்து மாணவர்களுக்கு ஒருவார காலத்திற்கு சான்றிதழ்கள் கிடைத்துவிடக்கூடிய சூழல் நிலவிவந்தது. ஆனால் தற்போது 15 தினங்களாகியும் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் கிடைத்தபாடில்லை.
கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டால், நாங்கள் பரிந்துரைத்துவிட்டோம். வட்டாட்சியர் அலுவலகம் சென்று விசாரித்துக் கொள்ளுங்கள் எனப் பதிலளிக்கின்றனர். வட்டாட்சியர் அலுவலகம் சென்று விசாரித்தால், இணைய சேவை( நெட் கனெக்ஷன்) வேகமில்லை. நாங்கள் என்ன செய்வது எனப் பதிலளிக்கின்றனர் என்று விண்ணப்பதாரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் விண்ணப்பிக்கும்போது பெறப்படும் ஒப்புகைச் சீட்டில், சான்றிதழ் நிலவரம் குறித்து அறிய கட்டணமில்லாச் சேவை எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், விண்ணப்பதாரரின் அழைப்பு முக்கியமானது, எனவே எங்களது அலுவலர் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார் என்ற பதிவுசெய்யப்பட்ட ஒலி ஒலித்துக் கொண்டே இருக்கிறதே தவிர, எவரும் தொடர்பில் வந்து விளக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடிப்பதால், உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு இ-சேவை முகமையின் அலுவலர்களைத் தொடர்பு கொண்டபோது, ''இதுவரை புகார் வரவில்லை. ஆனால் தற்போது பொதுமுடக்கக் காலம் என்பதால் பெரும்பாலானார் இணையத் தொடர்பில் உள்ளது மட்டுமின்றி, ஜூம் செயலி இணைய வழி கருத்தரங்கும், கூட்டம், ஆலோசனை என இணையப் பயன்பாடு அதிகரித்திருப்பதால், 4 ஜி சேவை போதுமானதாக இல்லை'' எனத் தெரிவிக்கின்றனர்.