கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பள்ளி மாணவர்கள். 
வெற்றிக் கொடி

கொடைக்கானல் அருகே சேதமடைந்த சாலையை சீரமைத்த மாணவர்கள்: ஆனந்தகிரி பகுதி பொதுமக்கள் பாராட்டு

செய்திப்பிரிவு

கொடைக்கானல் அருகே சேதமடைந்த சாலையை அப்பகுதி பள்ளி மாணவர்கள் தாங்களே முன்வந்து சீரமைத்தனர். மாணவர்களின் பொதுநல உணர்வை ஆனந்தகிரி பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

கொடைக்கானல் ஆனந்தகிரி கூலிகாட் சாலையில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன.இதனால் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாயினர். சாலையை சீரமைக்கக் கோரி நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து, சேதமடைந்த சாலையை சீரமைப்பு செய்வது என அப்பகுதி பள்ளி மாணவர்கள் களம் இறங்கினர்.

ஆனந்தகிரி பகுதியில் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கற்களை எடுத்து வந்து பள்ளமான சாலையில் நிரப்பினர். அதில் சாலையோரம் இருந்த மண்ணை வெட்டி எடுத்து கொட்டும் பணியில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிறு வயதிலேயே பொதுப் பிரச்சினையில் தீர்வு காண முன்வந்த மாணவர்களை ஆனந்தகிரி பகுதி மக்கள் பாராட்டினர்.

சாலையை சீரமைத்த மாணவர்கள் கூறுகையில், தினமும் பள்ளி செல்வதற்கு குண்டும், குழியுமான இந்த சாலையை கடந்து தான் செல்கிறோம். எங்களுக்கே நடந்துசெல்ல சிரமமாக உள்ளது. முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் நண்பர்களுடன் சாலையை சீரமைக்க நாங்களே முடிவு செய்து இந்த பணியை செய்தோம்" என்றனர்.

SCROLL FOR NEXT