தொழிற்சாலைகளில் இரவு பணியிலும் பெண்கள் வேலை செய்ய தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் 2 நாட்கள் நடக்கும் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நேற்று தொடங்கியது.
மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்து பேசியதாவது:
தொழிற்சாலைகளில் இரவு 7 மணிக்கு மேல் மறுநாள் காலை 7 மணி வரை ஆண்கள் வேலை செய்கிறார்கள். அதேபோல், பெண்களாலும் இரவுப் பணியில் ஈடுபட முடியும். ஆனால், இரவுப் பணி செய்ய பெண்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆண் - பெண் சமத்துவம் பற்றி பேசுகிறோம். ஆனால், இரவுப் பணியில் பெண்களுக்கு தடை உள்ளது. இது சமுதாயத்துக்கு நல்லது இல்லை.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கையாக இந்த திட்டத்தை நான் பார்க்கிறேன். அதேபோல், இரவு பணி செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சரிசெய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இரவு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்கும் வசதியையும், பாதுகாப்பான பயண வசதியையும் தொழிற்சாலைகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
இவ்வாறு முதல்வர் பினராயி பேசினார். பெண்களை இரவு பணியில் ஈடுபடுத்த கூடாது என்று தொழிற்சாலை சட்டம் - 1948 பிரிவு 66(1)(பி)-ஐ வழி வகுக்கிறது. ஆனால், இந்தச் சட்டப்பிரிவை நீக்கி கர்நாடக அரசு கடந்த ஆண்டு பெண்களை இரவு பணியில் ஈடுபடுத்தலாம் என்று அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.