மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கும் ஆசிரியர் கந்தன் 
வெற்றிக் கொடி

பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு வரும் மாணவர்களுக்கு பொரி உருண்டை: ஈரோடு ஆசிரியரின் புதுமுயற்சி

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துக் கொண்டு வரும் மாணவர்களுக்கு, பொரி உருண்டை, கடலை மிட்டாய் ஆகியவற்றை பரிசாக வழங்கி, ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 800 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் வேளாண் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கந்தன். பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்புக்காக விழிப்புணர்வை மேற்கொள்ள நினைத்த ஆசிரியர் கந்தன், அதற்கான வித்தியாசமான முறையை கையில் எடுத்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார் ஆசிரியர் கந்தன். 10 பைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து வந்தால், அவர்களுக்கு பரிசாக இனிப்புகள் வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இது மாணவர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வகுப்பு இடைவேளை நேரங்களில் பள்ளி சுற்றுப்புறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து ஆசிரியரிடம் கொடுத்து, பொரி உருண்டை, கடலை மிட்டாய் போன்றவற்றை மாணவர்கள் வாங்கிச் செல்கின்றனர். இதன்மூலம் பிளாஸ்டிக் இல்லா பள்ளியை உருவாக்க முடிந்ததாக பெருமிதம் கொள்கிறார் ஆசிரியர் கந்தன். இந்த முயற்சி மூலம் பள்ளி சுற்றுப்புறத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை மாணவர்கள் அகற்றியுள்ளனர்.

SCROLL FOR NEXT