வெற்றிக் கொடி

பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் விருதுநகர் அருகே அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

இ.மணிகண்டன்

விருதுநகர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர் அருகே உள்ள நடுவப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களிடம் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும்,பயிர்சாகுபடி மற்றும் தோட்டப் பயிர்கள் வளர்க்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம்அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியின்தலைமை ஆசிரியை சிலம்புச்செல்வியின் மேற்பார்வையில் தோட்டக்கலை விவசாய ஆர்வலர் குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக பகுதி நேர ஓவிய ஆசிரியர் என்.கந்தசாமி, தமிழ் ஆசிரியர் சோலைசெல்வம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

இது குறித்து ஓவிய ஆசிரியர் கந்தசாமி கூறியதாவது:அழிந்து வரும் விவசாயத்தைப் பாதுகாக்கவும், இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இக்குழு தொடங்கப்பட்டுள்ளது. இதில்6, 7, 8-ம் வகுப்புகளைச் சேர்ந்த50 மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். பள்ளிவளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறித் தோட்டம் மாணவர்களால் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கத்தரி, சுரைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து வளர்த்து எதிர்பார்த்த அளவில் மகசூலும் ஈட்டியுள்ளோம்.

பள்ளியில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் அனைத்தும் சத்துணவுக்காகப் பள்ளிக்கே வழங்கி விடுவோம். மாணவ, மாணவிகள் தினமும்குழுக்களாகப் பிரிந்து செடி, கொடிகளை பாரமரிக்க பயிற்சி அளித்து வருகிறோம். இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்த தோட்டத்தை பார்வையிட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இர.கண்ணன் மாணவ, மாணவிகளைப் பாராட்டினார். பள்ளிவளாகத்தில் சுற்றுச் சுவர் இல்லாததால் சிறிய பரப்பளவில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளோம். பள்ளியில் விரைவில் சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது. அதன் பிறகு பள்ளி வளாகத்தில் சற்று பெரிய அளவில் மூலிகைத் தோட்டமும் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT