வெற்றிக் கொடி

யோகாசனத்தில் கோவை மாணவி கின்னஸ் சாதனை

செய்திப்பிரிவு

கோவை

யோகாசனத்தில் கோவை பார்க் குளோபல் பள்ளி மாணவி வைஷ்ணவி கின்னஸ் சாதனை நிகழ்த்திஉள்ளார்.

கோவை பார்க் குளோபல் பள்ளியில் பிளஸ் 2 வணிகவியல் பாடப்பிரிவில் படித்து வருபவர் எஸ்.வைஷ்ணவி. இவர் யோகாசன வீராங்கனையாவார்.

கின்னஸ் உலக சாதனை தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, பள்ளிநிர்வாகத்தின் ஏற்பாட்டில் கின்னஸ்உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாணவி எஸ்.வைஷ்ணவி யோகாசனத்தில் முந்தைய உலக சாதனைகளை முறியடித்து, புதிய சாதனை நிகழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதன்படி, சக்கர சுழல் நிலையில் 20 மீட்டருக்கு மேல் பயணித்தல்,சலபாசன நிலையில் 26 நிமிடங்கள் இருத்தல், பாம்பாசன நிலையில் முதுகு தண்டு மூலமாக விரைவாக 3 பலூன்களை வெடிக்கச் செய்தல்,சக்கர கோனாசன நிலையில் 1.28நிமிடம் நிற்றல் ஆகிய 4 சாதனை முயற்சிகளை மேற்கொண்டு, முந்தையை சாதனைகளை முறியடித்து, புதிய சாதனை படைத்தார். தனது சாதனை குறித்து மாணவி எஸ்.வைஷ்ணவி கூறியதாவது:எனக்கு சொந்த ஊர் திருப்பூர். படிப்புக்காக தற்போது கருமத்தம்பட்டியில் பெற்றோர் வி.சரவணக்குமார்-எஸ்.விமலா மற்றும் இளைய சகோதரி எஸ்.யோகேஸ்வரி ஆகியோருடன் வசித்து வருகிறேன். தந்தை சரவணக்குமார் யோகா பயிற்றுநர் என்பதால், சிறு வயதிலேயே எனக்கும் யோகாசனம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு, தந்தையிடம் யோகாகற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.

5-ம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் யோகாசன போட்டியில் பங்கேற்றேன் அப்போது எனக்கு பரிசுஏதும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்ற போது இரண்டாம் பரிசு கிடைத்தது, ஆறுதலாக இருந்தது. அதன்பின்னர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகள் பெற்று வருகிறேன்.

கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகாசன போட்டியில் அத்லடிக்ஸ், ஆர்ட்டிஸ்டிக்ஸ் பிரிவுகளில் பங்கேற்று இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்றேன். அதற்கு முன் ஜூலை மாதம் ஐரோப்பாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும், இதே பிரிவுகளில் தங்கப்பதக்கங்கள் வென்றேன். 2018-ம் ஆண்டுகின்னஸ் உலக சாதனை தினத்தையொட்டி, யோகாசனம் செய்தபடியே கால்களால் 6 முட்டைகளை உடையாமல் எடுத்து ஒரு குடுவைக்குள்வைத்தேன். அது உலக சாதனையாக பதிவாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

தற்போது நிகழ்த்திய 4 யோகாசனமுயற்சிகளும், முந்தையை சாதனைகளை முறியடித்துள்ளன. விரைவில் கின்னஸ் புத்தகத்தில் மீண்டும் இடம் பெறுவேன். நானும்,தங்கையும் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் இப்பள்ளியில் இலவசக்கல்வி, ஜிம்னாஸ்டிக்ஸ் கற்று வருகிறோம். படிப்பு, விளையாட்டு எனஅனைத்திலும் பள்ளி நிர்வாகத்தினர் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர். மாணவர்களாகிய எங்களுடைய திறமையை வெளிக்கொணரவும், அதை வெளியுலகத்திற்கு கொண்டு செல்வதிலும் வழிகாட்டியாக விளங்குகின்றனர். பள்ளியின்தலைமை நிர்வாக அதிகாரி அனுஷாரவி, முதல்வர் ஆர்.உமாதேவி மற்றும்ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைஷ்ணவி கூறினார்.

SCROLL FOR NEXT