அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள வெற்றியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்திலேயே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் அமைந்துள்ளது.
இந்தப் பள்ளிகளில் வெற்றியூர், விரகாலூர் கிராமத்தைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக் கதவு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் முன்பு உள்ள சாலையில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் பள்ளியின் முன்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து, ஆசிரியர்களின் முயற்சியால் மூங்கில் வேலி அமைக்கப்பட்டது.
இடிந்த சுற்றுச்சுவரைக் கட்டவும் இரும்புக் கதவு அமைக்கவும் பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்துக்கு கிராம மக்கள் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதில் பலன் இல்லாததால் கிராம மக்கள் தாங்களே சுற்றுச்சுவர் கட்டித்தர முன்வந்தனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த மறைந்தராணுவ வீரர் பாக்கியராஜின் தந்தை மூர்த்தி ரூ.10 ஆயிரம் செலவில் இரும்பு வளைவு, மறைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரனின் உறவினர் பாண்டியன் ரூ.10 ஆயிரம்மதிப்பில் இரும்புக் கதவு, சமூகஆர்வலர்கள் ராஜா சந்திரகாசன், ராஜ்குமார், பாலா, பசுபதி, சவுந்தர், கணபதி, அரங்கநாதன், முத்துப்பாண்டி, தனபால், தன்ராஜ், அன்புதாசன், திருமுருகன், உதயகுமார், தனசங்கு, சுயம்பிரகாசம், நல்லேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்களிப்பு ரூ.17 ஆயிரம் மதிப்பீட்டில் இடிந்த சுற்றுச்சுவரின் முன்பகுதி கட்டப்பட்டது.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்த கிராம மக்கள் அனைவருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.