லக்னோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெல்த் ஏடிஎம் : படம் ஏஎன்ஐ 
வெற்றிக் கொடி

9 நிமிடம் அல்லது 6 நிமிடம்: ஹெல்த் ஏடிஎம் அமைத்து அசத்தும் லக்னோ ரயில் நிலையம்

செய்திப்பிரிவு

லக்னோ

பயணிகளுக்கு குறைந்த நேரத்தில் நிறைவான மருத்துவ சேவை வழங்கும் வகையில், 6 நிமிடம் அல்லது 9 நிமிடங்களில் உடல் நலப் பரிசோதனை முறையை உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோ ரயில் நிலையம் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு ஹெல்த் ஏடிஎம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஹெல்த் ஏடிஎம்களை யோலோ நிறுவனம் நடத்துகிறது.

6 நிமிடத்தில் உடல்நலப் பரிசோதனை செய்வதற்கு பயணிகளுக்கு 50 ரூபாயும், 9 நிமிடத்தில் பயணி ஒருவருக்குப் பரிசோதனை செய்ய 100 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் பயணியின் செல்போன் அல்லது வாட்ஸ் அப் எண், மின்னஞ்சல் ஆகியவற்றில் அடுத்த சிறிது நேரத்தில் அனுப்பி வைக்கப்படும்.

இந்த ஹெல்த் ஏடிஎம், யோலோ எனும் தனியார் நிறுவனத்தால் நடத்தப்படுவதாகும். ஒரு பயணி தான் பயணத்தைத் தொடங்கும் முன் குறைந்த நேரத்தில் தனது உடல்நலம் குறித்து தெரிந்துகொள்ள இது பயன்படும். இந்த நிறுவனம் அடிப்படை பரிசோதனைகள், இதயநோய், நரம்பியல், குடலியல், அவசரகால சிகிச்சை ஆகியவற்றைப் பயணிக்கு வழங்கி வருகிறது.

யோலோ ஹெல்த் ஏடிம் குறித்து மாநிலத் தலைவர் அமரேஷ் தாக்கூர் கூறுகையில், "லக்னோ ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள ஹெல்த் ஏடிஎம்மில் நாள்தோறும் 50 முதல் 60 பயணிகள் பயன்பெறுகிறார்கள். பயணத்தில் இருக்கும் பயணி ஒருவருக்கு அதிகமான காய்ச்சல், அல்லது வேறு ஏதாவது உடல்நலக் குறைவு இருந்தால், தொடர்ந்து அவர் பயணத்தைத் தொடர முடியுமா, உடல்நலன் எவ்வாறு இருக்கிறது என்பதைக் குறுகிய நேரத்தில் தெரிந்துகொள்ள இந்த ஹெல்த் ஏடிஎம் உதவும்.

ஒருவேளை பயணத்தைத் தொடர முடியாத சூழலில் இருந்தால், நாங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்துவோம். இதற்குப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இதேபோன்ற ஹெல்த் ஏடிஎம்களை பரேய்லி, மொராதாபாத் ரயில் நிலையங்களிலும் தொடங்க இருக்கிறோம். மேலும், கோரக்பூர், கோண்டா, பிரயாக்ராஜ், பாஸ்தி ஆகிய இடங்களிலும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

9 நிமிடப் பரிசோதனையில் பயணிக்கு பிஎம்ஐ, ரத்த அழுத்தம், உடல் கொழுப்பு, ஹீமோகுளோபின்,மெடபாலிக் ஏஜ், மசில் மாஸ், எடை, உயரம், வெப்பநிலை, குளுகோஸ் அளவு, எலும்பு உறுதி, இதயத்துடிப்பு உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன" என்று அமரேஷ் தாக்கூர் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT