மதுரை
ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டியின் சைக்கிள் போட்டியில், மதுரையைச் சேர்ந்த தி.சித்தார்த்தன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த திருமாறன்-கற்பகம் ஆகியோரின் மகன் சித்தார்த்தன் (18). மனவளர்ச்சி குன்றிய இம்மாணவர் மதுரை சிக்கந்தவர் சாவடியில் உள்ள பெத்சான் எனும் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பங்கேற்றுள்ளார். அதில் போபால் (2013), ராஞ்சி (2018)யில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
மேலும், தேசிய அளவிலான பாரத் ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இத்தகுதியின் அடிப்படையில், சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டியின் ஐஎன்ஏஎஸ் குளோபல் கேம்ஸுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
அதன்படி ஆஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேன் பகுதியில் அக்.12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 55 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து 21 பேர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட 6 பேரில் சித்தார்த்தனும் ஒருவர்.
ஏற்ற இறக்கங்கள் அடங்கிய 20 கி.மீ. தூரத்தை கடக்கும் இரட்டையர் சைக்கிள் போட்டியில் பங்கேற்ற சித்தார்த்தன், ஹரியாணாவைச் சேர்ந்த நீல் யாதவ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர். 20 கிலோ மீட்டர் தூரத்தை 46 நிமிடத்தில் கடந்த சித்தார்த்தன் மூன்றாவது இடம் பிடித்தார்.
மாற்றுத்திறனாளி சித்தார்த்தன், பெங்களூரு சைவாஸ் அமைப்பு பெஞ்சமின், ஆருன் பெஞ்சமின் ஆகியோரது ஏற்பாட்டில் பங்கேற்றார். இவரது பயிற்சியாளராக திருவனந்தபுரம் உஷா நாயர் இருந்தார்.