போபால்
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயில தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு முடிந்தும் இன்னும் 9 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.
ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுட் என்பவர் கடந்த மாதம் 12-ம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு இந்தப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம்தேதி மாணவர்கள் சேர்க்கை எய்ம்ஸ் கல்லூரியில் முடிந்த பின் இன்னும் 9 இடங்கள் காலியாக உள்ளன. நாக்பூர், பத்திண்டா, ராய்பூர் கல்லூரியில் தலா ஒரு இடம், தியோகர், பாட்னா, ரேபரேலியில் தலா 2 இடங்கள் என மொத்தம் 9 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. புதுடெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், ராய்பூர், மங்களகிரி, ரிஷிகேஷ், பாட்னா, நாக்பூர், பத்திண்டா, தியோகர், சாங்சரி, அவந்திபுரா, விஜய்பூர், ரேபரேலி ஆகிய 15 கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மே 25, 26-ம் தேதிகளில் நடந்து முடிந்தது.
ஆர்டிஐ ஆர்வலர் கவுட் கூறுகையில், "லட்சக்கணக்கான மாணவர்கள் இடம் கிடைக்காமல் தவிக்கும் போது 9 இடங்கள் வீணாகக்கூடாது" எனத் தெரிவித்தார்.